அரியலூர்: கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்டமான சிலை அமைக்கப்படும் என்று அறிவித்தவர், சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என பிரதமர் மோடி பெருமிதத்துடன் பேசினார்.
சிவனின் தரிசனமும், இளையராஜாவின் இசையும் என் ஆத்மாவை ஆனந்தத்தில் ஆழ்த்தி விட்டது; கங்கைகொண்ட சோழபுரம் குறித்த கண்காட்சியை பார்த்து வியந்து விட்டேன். தமிழ் மொழியில் பகவத்கீதையின் இசைத் தொகுப்பு வெளியிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது; சோழ அரசர்களின் அரசியல், வணிக தொடர்பு மாலத்தீவு துவங்கி கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவி இருந்தது என்று புகழாரம் சூட்டினார்.
- சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம்
- ‘ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரமாண்ட சிலை
- பிரகதீஸ்வரரிடம் 140 கோடி மக்களின் நலனுக்காக பிரார்த்தனை செய்தேன்

முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்றது. . இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி, தமிழக கவர்னர் ரவி, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட அரசியல் கட்சியிர், அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.
விழாவில், பிரதமர் மோடி, ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி‘ வணக்கம் சோழ மண்டலம்‘ எனக்கூறி உரையை பிரதமர் மோடி துவக்கினார்.
நமசிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ் இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்ற திருவாசகத்தை மேற்கோள் காட்டியும் பேசினார். தொடர்ந்து பேடிசியவர், இந்த அவையில் இளையராஜாவின் சிவபக்தி, மழை காலத்தில் மிக சுவாராஸ்யமாக, பக்தி நிரம்பியதாக இருந்தது. இந்த சிவ கோஷத்தை கேட்கும் போது, எனக்கு பரவசமாக இருந்தது. இந்த ஆன்மிக அனுபவம் எனது ஆன்மாவை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திவிட்டது என்று இளையராஜாவின் இசையை பெருமையுடன் விமர்சித்தவர், கங்கைகொண்ட சோழபுரத்தில் வழிபாடு நடத்திய பிரகதீஸ்வரர் ஆலயம் குறித்து சிலாகித்து பேசினார்.
பிரகதீஸ்வரர் கோவில் நிர்மாணம் துவங்கி ஆயிரம் ஆண்டுகள். வரலாற்றுப்பூர்வமான சந்தர்ப்பம்.இப்படிப்பட்ட வேளையில், பிரகதீஸ்வரரை வழிபாடு செய்ய க்கூடிய பேறு எனக்கு கிடைத்தது. நான் இந்த கோவிலில் 140 கோடி மக்களின் நலனுக்காகவும், பாரதத்தின் வளர்ச்சிக்காகவும் பிரார்த்தனை செய்தேன். சிவனின் நல்லாசிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சிவபெருமானை வழிபாடு செய்பவனும் சிவபெருமானிலேயே கலந்து விடுகிறான். அவரை போலவே அழிவற்ற வனாக ஆகிவிடுகிறான் என சாத்திரங்கள் கூறுகின்றன. சிவபெருமானிடம் ஆழ்ந்த பக்தி கொண்ட சோழ பாரம்பரியமும் கூட அமரத்துவம் வாய்ந்துவிட்டது.

இந்த நிகழ்ச்சியில், சின்மயா மிஷன் முயற்சி காரணமாக பகவத் கீதையின் இசைத்தொகுப்பை தமிழில் வெளியிடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த முயற்சி நம்முடைய பாரம்பரியத்தை போற்று பாதுகாக்கும் நமது மன உறுதிக்கு சக்தி ஊட்டுகிறது. இதற்காக அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
சோழர்கள், தங்களின் அரசியல் மற்றும் வியாபார தொடர்புகளை இலங்கை, மாலத்தீவு, தென்கிழக்கு ஆசியா வரை செய்திருந்தனர். நேற்று மாலத்தீவில் இருந்து வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளதில் மகிழ்ச்சி. ராஜ சோழன், ராஜேந்திர சோழன் பாரதத்தின் அடையாளங்கள். கவுரவத்தின் இணைச்சொற்கள். இன்று நாம் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேற்றம் கண்டு வருகிறோம். நான் ராஜேந்திர சோழனை வாழ்த்துகிறேன்.
இந்தியாவின் பொற்காலம்
சோழ சாம்ராஜ்ஜியத்தின் காலகட்டம், இந்தியாவின் பொற்காலங்களில் ஒன்றாக உள்ளது என வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். ஜனநாயகத்தின் தாய் என்ற வகையிலும் கூட இந்தியாவின் பாரம்பரியத்தை சோழ சாம்ராஜ்ஜியம் முன்னெடுத்து சென்றது. வரலாற்று ஆய்வாளர்கள் மக்களாட்சி என்று சொன்னால், பிரிட்டனின் மேக்னா கார்ட்டாவை பற்றி பேச துவங்கிவிடுவார்கள். ஆனால், பல நூற்றாண்டு முன்பாக சோழ சாம்ராஜ்ஜியத்தில் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்தது.
சோழர்களே ஜனநாயகத்தின் முன்னோடிகள். சோழர்களின் ஆட்சியே ஜனநாயகத்தின் தாய். பிரிட்டனுக்கு முன்பாகவே ஜனநாயக ரீதியில் குடவோலை முறை ஆட்சி செய்தவர்கள் சோழர்கள்

இன்று உலகமெங்கும் நீர்மேலாண்மை சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், நமது முன்னோர்கள், இதன் முக்கியத்துவத்தை அறிந்து இருந்தனர். பல இடங்களில் தங்கம், வெள்ளி, பசுக்கள் பிற கால்நடைகள் என கவர்ந்து வந்த அரசர்களை பற்றி கேள்விப்பட்டுள்ளோம் ஆனால் ராஜேந்திர சோழன் கங்கை நீரை கொண்டு வந்தார். ராஜேந்திர சோழன் வடக்கில் இருந்து கங்கை நீரை கொண்டு வந்து தெற்கில் நிறுவினார். சோழ கங்கை ஏரியில் நிரப்பினார். இது பொன்னேரி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
கங்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர் ராஜேந்திர சோழன். கங்கை நதியை தென்னகத்துக் கொண்டு வந்தார். உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் பிரம்மாண்ட கோவிலை கட்டினார். கங்கையில் இருந்து எடுத்து வந்த புனித நீரால் இ்ஙகு அபிஷேகம் நடந்தது. ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம் கோவிலை கட்டினார். இந்த கோவில், இன்னமும் கூட உலகில் கட்டடவியல் அற்புதமாக திகழ்கிறது. காவிரி பெருகி பாயும் இந்த மண்ணில் கங்கைக்கு விழா எடுக்கப்படுவது சோழ சாம்ராஜ்ஜியத்தின் நன்கொடையாகும். கங்கை நீரை காசியில் இருந்து மீண்டும் கொண்டு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
சோழ மன்னர்கள் கலாசார ஒற்றுமையை ஊக்குவித்தனர். காசி தமிழ் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் வாயிலாக மத்திய அரசும் அதனை செய்கிறது. கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பழமை வாய்ந்த கோவில்கள், தொல்லியல் துறை வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. புதிய பார்லிமென்ட்டில் தமிழ் கலாசாரத்தோடு தொடர்புடைய செங்கோல் நிறுவப்பட்டது. இதனை நினைத்து பார்த்தால், எனது மனம் பெருமிதத்தில் பொங்குகிறது.

சிதம்பரம் நடராஜர் கோவிலின் சில தீட்சிதர்களை சந்தித்தேன். அவர்கள் எனக்கு கோவில் பிரசாதத்தை அளித்தனர். நடராஜரின் சொரூபம், நமது தத்துவம் அறிவியல் வேர்கள் ஆகியவற்றின் அடையாளம். நடராஜரின் ஆனந்த தாண்டவ மூர்த்தி பாரத மண்டபத்தில் அழகுக்கு அழகு சேர்த்து கொண்டுள்ளது. இங்கு தான் ஜி20 மாநாடு நடந்தது. உலக தலைவர்கள் ஒன்று கூடினார்கள்.
நமது சைவ பாரம்பரியம், இந்தியாவின் கலாசார நிர்மாணங்களில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளது. சோழர்கள், இந்த நிர்மாணத்தின் முக்கிய சிற்பிகளாக விளங்கினார்கள். இதனால் சைவ பாரம்பரியத்தில் உயிர்ப்புடைய மையங்களில் தமிழகம் முக்கியமானது. உலகம் நிலையில்லா தன்மை, வன்முறை, சுற்றுச்சூழல் போன்ற பிரச்னைகளில் உழலும் வேளையில், தீர்வளிக்கும் பாதையை சைவம் சித்தாந்தம் விளக்கி காட்டுகிறது. திருமூலர், அன்பே சிவம் என்றார். இந்த கோட்பாட்டை உலகம் முழுதும் கடைபிடித்தால் பெரும்பாலான பிரச்னைகள் தாமாக தீர்ந்துவிடும் இந்த எண்ணத்தை தான் பாரதம், ஒர் உலகம், ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற வகையில் முன்னெடுத்து செல்கிறது.
இந்தியாவில் களவாடப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட கலைப்பொருட்களை மீட்டு கொண்டு வந்துள்ளோம். இவற்றில் 36 கலைப்பொருட் கள் தமிழகத்தைச் சேர்ந்தவை. நமது மரபும், சைவ தத்துவத்தின் முத்திரையும் பாரதத்தோடும், உலகோடு மட்டும் நிற்கவில்லை. உலகின் தெற்கு பகுதியில் இறங்கிய முதல் நாடு என்ற பெருமை கிடைத்தது. அந்த பகுதிக்கு சிவசக்தி என்ற பெயர் கிடைத்தது. இனிமேல் அந்த பகுதி சிவசக்தி என அடையாளம் காணப்படும்.
சோழர்காலத்தில் எந்த பொருளாதார உயரங்களை இந்தியா தொட்டதோ இன்றும் கூட நமது கருத்து. ராஜராஜ சோழன் கடற்படையை உருவாக்கினான். ராஜேந்திர சோழன் இதனை மேலும் வலுப்படுத்தினார். உறுதிப்படுத்தினார். அவருடைய காலகட்டத்தில் பல நிர்வாக மேம்பாடுகள் புரியப்பட்டன. உள்ளூர் நிர்வாக அமைப்புகளை வலிமைப்படுத்தினார். பாரதம் அனைத்து திசைகளிலும் முன்னேறி கொண்டு இருந்தது. சோழ ராஜ்ஜியம் புதிய பாரதத்தின் உருவாக்கத்திற்கான வரைபடம் போன்றது. வளர்ச்சியடைந்த தேசத்தை உருவாக்க வேண்டுமானால் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணம் செய்தாலும் கூட, அதன் கோபுரத்தை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் ஆலயத்தை விட குறைவாக வைத்தார்.தனது தந்தையால் கட்டி எழுப்பப்பட்ட கோவில் கோபுரத்தை அனைத்தையும்விட உயரமானதாக தக்க வைக்கவே அவர் விரும்பினார். தனது மகத்துவத்துக்கும் இடையேயும், கூட ராஜேந்திர சோழன் மிகுந்த பணிவினை வெளிப்படுத்தினார். வரும் காலத்தில் தமிழகத்தில் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட உருவ சிலை அமைப்போம். இந்த சிலைகள் நமது வரலாற்றை விழிப்புணர்வின் நவீன கொடிமரங்கள் ஆகும்.
அப்துல் கலாமின் நினைவு தினம் வளர்ச்சியடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க, சோழ பேரரசர்களை போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை. சக்தியும், பக்திமிக்க இளைஞர்கள் மக்களின் கனவை நிறைவேற்றுவார்கள். நாம் அனைவரும் ஒரே பாரதம் உன்னத பாரதத்தை முன்னெடுத்து செல்வோம்.
பாரதம் நமது பாதுகாப்பை அனைத்தையும் விட மிகப்பெரியதாக கருதுகிறது. பாரதம், தனது பாதுகாப்பு இறையாண்மை மீது தாக்குதல் நடத்தினால் எப்படி பதிலடி கொடுக்கும் என்பதை ‘ ஆபரேஷன் சிந்தூர்’ எடுத்துக் காட்டியது. பயங்கரவாதிகளுக்கு எந்தவொரு மறைவிடமும் பாதுகாப்பானது கிடையாது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது.ரோடு ஷோவின் போது அங்கிருந்த அனைவரிடமும் ஆபரேஷன் சிந்தூர் எதிரொலித்தது. இது நாட்டு மக்களிடமும் எதிரொலிக்கிறது. இதனை கண்டு உலகம் வியந்து பார்க்கிறது. இந்தியாவின் வல்லமையை உலகம் கண்டு கொண்டு வருகிறது. இந்திய கடற்படை, பாதுகாப்பு படைகளை வலுப்படுத்த வேண்டும்.புதிய வாய்ப்புகளை தேட வேண்டும். இதோடு நமது விழுமியங்களை பாதுகாக்க வேண்டும்.நமது நாடு, இதை தாங்கி முன்னேறி வருகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக கங்கைகொண்ட சோழபுரம் விழாவில் பங்கேற்க திருச்சியில் இருந்து கார் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடிக்கு, சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர், ஹெலிகாப்டர் மூலம், அரியலூர் மாவட்டம் பொன்னேரி சென்றடைந்தார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
பொன்னேரியில் கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்த பிரதமர் மோடி, காரில் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் சென்றார். சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோடு ஷோ சென்ற பிரதமர் மோடிக்கு, வழிநெடுகிலும் திரண்டிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, தமிழர் பாரம்பரிய உடை அணிந்திருந்த பிரதமர் மோடி சாலையின் இரு புறங்களிலும் கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.