சென்னை: தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில், மாநகராட்சிஆணையர் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில்,  39.52 லட்சம் வாக்காளர்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி 2025 ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி முதல் கடந்த 18 ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் வெளியிடுவது தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியலி வெளியிடப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து,  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பட்டியலில் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்பு உள்ளிட்டவற்றுக்கு இன்று முதல் விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. பொதுமக்கள் அதற்கென தனியாக உள்ள விண்ணப்பங்களை 6, 6பி, 7, 8 வாங்கி பூர்த்தியிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.நவம்பர் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அடுத்த மாதம் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளது. இதிலும் விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, 2025 ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலாக வெளியிடப்படும். அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.https://voters.eci.gov.inஎன்ற இணையதளம், ‘VOTER HELPLINE’ என்ற கைபேசி செயலி மூலம் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

இதற்கிடையில், தமிழக அரசால், 09.11.2024 அன்று பணிநாளாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம், சிறப்பு முகாம் தேதிகளை 09.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 10.11.2024 (ஞாயிற்றுக்கிழமை)க்கு பதிலாக, 16.11.2024 (சனிக்கிழமை) மற்றும் 17.11.2024 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று  மாநிலம் முழுவதும் புதிய வரைவு வாக்காளர்கள் பட்டியலை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில் மாநகராட்சி ஆணையர் குமரகுருபன் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி,  சென்னையில் மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.  சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில்,  மொத்தம்  19.41 லட்சம் ஆண்கள், 20.09 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர். சென்னை மாவட்டத்தில் ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம்.

இதைத்தொடர்ந்து,  அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1-ந்தேதியை, புதிய வாக்காளராக தகுதி ஏற்படுத்தும் நாளாக (18 வயது பூர்த்திக்கான நாளாக) வைத்து புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பு பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். இந்த திருத்தப் பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான 2025-ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான வரைவு வாக்காளர் பட்டியலினை கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) பிரியா,
.எம்.பிருதிவிராஜ், இ.ஆ.ப., அவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் (தேர்தல்) திரு.பி.சுரேஷ் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என கூறப்பட்டுள்ளது.