டெல்லி: எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தின் அனுமதியின்றி, மாநில அரசு வாபஸ் பெற முடியாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இந்த வழக்கில், நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியாவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர், மாநிலங்களில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில்,  அதில் கடந்த 2 ஆண்டுகளுக்குள்ளாக எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளின் எண்ணிக்கை 17% அதிகரித்துள்ளதாகவும்,  பல மாநிலங்களில் அரசுகள் தங்களது கட்சிகளை  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை சிஆர்பிசி 321ன்படி திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் வினித் கரண், சூர்யகாந்த் ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு  வந்தது. அப்போது நீதிபதிகள்,  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை  மாநில அரசுகள் தன்னிச்சையாக  வாபஸ் பெற முடியாது. அவ்வாறு வாபஸ் பெறுவதாக இருந்தால், அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.

எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் மறு உத்தரவு வரும்வரை அதே பதவியில் தொடரலாம்.

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் விசாரணையைக் கண்காணிக்க சிறப்பு அமர்வு ஒன்றை அமைக்க உச்ச நீதிமன்றம் ஆலோசித்து வருகிறது..

வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்கு விவரங்களை வேட்பாளராக தேர்வு செய்த 2 வாரத்தில் கட்சி வெளியிட வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதை 48 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற விசாரணையிகளில்,  சிபிஐ தரப்பில் போதிய ஒத்துழைப்பு இல்லை  என்று கூறியதுடன்,  “இதற்கு மேல் எங்களிடம் சொல்ல வார்த்தைகள் இல்லை. அனைத்தையும் நாங்கள் செய்திருக்கிறோம் என அரசிடம் தெரிவித்துவிட்டோம். சில விஷயங்களை மட்டும்தான் கேட்கிறோம் என்ற நீதிபதிகள்,  வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தது.