9,10,11,12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் மத்தியஅரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற ‘PM-YASAVI கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாணவ மாணவிகளுக்கு ஆண்டு தோறும், 1,25,000 உதவிதொகை கிடைக்கும். இந்த உதவியைத் தொகையை தேசிய தேர்வு முகமை நடத்தும், யாசவி எனப்படும் நுழைவு தேர்வை எழுதி வெற்றி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை கிடைக்கும்.
இந்த தேர்வு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்டு மாதம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை என்டிஏ எனப்படும்  தேசிய தேர்வு முகமை நடத்து. முற்றிலும் அன்லைனில் நடைபெறும் இந்த தேர்வானது, ஆங்கிலம், மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  தேசிய தேர்வு முகமையின் இணைய தளத்தில், ஆன்லைனில்  மட்டுமே நுழைவுத்தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படும், 9 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு, ஆண்டுக்கு, 75 ஆயிரம் ரூபாயும், பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ, மாணவியர்களுக்கு ஆண்டிற்கு, 1.25 லட்சம் ரூபாயும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பெற்றோர்கள் ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும்,  இணையதளத்தில் (https://yet.nta.ac.in) இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயிலும், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார நிலையில் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த, 15 ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு, நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்து, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டதிற்கான தேர்வு இது.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்து 1547 மாணாக்கர்கள் தேர்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கான அவகாசம் ஆகஸ்டு 28ந்தேதியுடன் முடிவடைந்து விட்டது. தேர்வு செப்டம்பர் 11ந்தேதி நடைபெற உள்ளது.

ஆனால், இந்த யாசவி ஸ்காலர்ஷிப் தேர்வு குறித்து தமிழக மாணவ மாணவிளிடையே விழிப்புணர்வு இல்லாததால், பலர் இந்த இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உதவித்தொகைக்கான தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறையும், மாநில அரசும் முறையான நடவடிக்கை எடுக்காததால், தமிழக மாணவர்கள் இந்த தேர்வை எதிர்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ள இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எதிராக முன்னமேயே குரல் கொடுத்து, மாநில மொழிகளிலும் தேர்வு நடத்த ஏற்பாடு செய்திருந்தால், தமிழகத்தைச் சேர்ந்த 1547 மாணாக்கர்கள்  கல்வி உதவித்தொகை பெற சாத்தியமாகி யிருக்கும். ஆனால், இதை அரசும், அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்பது, வருத்தத்துக்கு உரிய விஷயமாகும்.

மத்திய அரசு அனைத்து துறைகளிலும், ஆங்கிலம் மற்றும் இந்தியை மட்டுமே வலியுறுத்தி வரும் நிலையில், நீட் தேர்வு போல, இதுபோன்ற தேர்வுகளையும் மாநில மொழிகளில் எதிர்கொள்ள அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

இனி வரும் ஆண்டிலாவது மத்தியஅரசின் கல்வி உதவித்தொகை பெற நடத்தப்படும் ‘யாசவி ஸ்காலர்ஷிப் தேர்வு’  தமிழில் எழுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பள்ளிகளிலும்,  இதுகுறித்து மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வை  ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என பத்திரிகை டாட் காம் வலியுறுத்துகிறது.