சென்னை: கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான புகார்களுக்கு ஆளான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டதாக கூறப்படும் நடவடிக்கை விவரங்களைப் பகிருமாறு மாநில அரசு அதிகாரிகளைக் கேட்டுள்ளது தமிழ்நாடு தகவல் ஆணையம்.
சென்னை மாநகராட்சி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் அந்த அதிகாரிகள்.
சென்னை உள்ளகரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், சோழிங்கநல்லூரி தாசில்தாரிடம், வெள்ள நிவாரண நிதியானது முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது என்று புகார் தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு உருவானது. வெள்ளச் சேதம் ஏற்பட்ட ஒரு மாதம் கழித்து அவர் இந்தப் புகாரை அளித்தார்.
ஆனால், தனது புகாரின் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா? என்பதை அறிய அவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுதாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் எஸ்.செல்வராஜ், சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவரங்களைப் பகிருமாறு உத்தரவிட்டார்.