சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையடுத்து நடைபெற்ற மறைமுக தேர்தலின்போது, பல்வேறு காரணங்களால் தேர்தல் நடைபெறாமல் விடுபட்ட 62 பதவி களுக்கு வரும் 26ந் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முடிவுக்கு பிறகு மார்ச் 4ந்தேதி மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலை வர்கள் பதவகிளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது சில இடங்களில் பிரச்சினை, உறுப்பினர்கள் அவைக்கு வராதது மற்றும், திமுக தலைமையின் உத்தரவை ஏற்றி, கூட்டணி கட்சிகளின் இடத்தை ஆக்கிரமித்தவர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தது உள்பட பல காரணங்களால் 62 தலைமை பதவிகள் காலியாக உள்ளது. இந்த இடங்களுக்கான மறைமுக தேர்தல் வரும் 26ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 4.3.2022 அன்று நடைபெற்ற சாதாரண மறைமுக தேர்தல்களின்போது பல்வேறு காரணங்களால் தேர்தல்கள் நடைபெறாமல் காலியாக உள்ள 62 பதவி இடங்களுக்கு 26.3.2022 (சனிக்கிழமை) அன்று நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் நடைபெறும்.
சென்னை உயர்நீதி மன்றத்தில், தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் மறைமுக தேர்தலை 26.3.2022 அன்று நடத்திட உள்ளதாக ஏற்கனவே ஆணையத்தால் தெரிவித்ததை தொடர்ந்து, ஆடுதுறை பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கூட்டம் 26.3.2022 அன்று நடத்திட அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பல்வேறு காரணங்களால் தேர்தல்கள் நடைபெறாமல் காலியாக உள்ள 60 பதவி இடங்களுக்கும் 26.3.2022 (சனிக்கிழமை) அன்று மறைமுக தேர்தல் கூட்டம் நடத்திட ஆணையத்தால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் தலைவர்- துணைத்தலைவர், மீஞ்சூர் பேரூராட்சியில் துணைத் தலைவர், திருமழிசை பேரூராட்சியில் துணைத்தலைவர், செங்கல்பட்டு மாவட்டம் இடைக்கழிநாடு பேரூராட்சியில் துணைத்தலைவர் ஆகிய பதவி இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.