சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, நாளை காலை 11.30 மணி அளவில்,  சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், அரசியல் கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளும்படி  மாநில தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து உள்ளது.

ஏற்கனவே  உள்ளாட்சி தேர்தல் பணிகள் கறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தி உள்ள நிலையில், தற்போது அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தஆலோசனை கூட்டத்தில், தேர்தல் விதிமுறைகள், அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய விதிகள் குறித்து விளக்கப்பட உள்ளது. அதேநேரம், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களும் கேட்கப்பட உள்ளன.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் தேதி, உச்சநீதி மன்றம் ஏற்கனவே கூறியபடி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.