திருவனந்தபுரம்,

ரும் 13ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டத்துக்கு கேரள காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேரளாவில்  வரும் 13-ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் அறிவித்து உள்ளனர்.

பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரமேஷ் சென்னிதாலா  செய்தியாளர்களிடம் கூறியதாவது.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை  கண்டித்து, கேரளா முழுவதும் வரும் 13-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்றார்.

மேலும் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள  ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல், டீசல் விலை  தினசரி உயர்வு போன்றவற்றால் மக்கள் துயரத்துக்கு ஆளாகி வருகிறார்கள். விலைவாசி விண்ணை தொடுகிறது. அதை குறைக்க மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்று விட்டது.

எனவே,  மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழு அடைப்பு (பந்த்) போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்த பந்துக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து உள்ளது.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.