சென்னை: நடப்பாண்டில் 27 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை செய்துள்ளது. மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்துள்ளது.
நாட்டிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தனியாருக்கு நிகரான வகையில், அரசு மருத்துவமனை களிலும் அனைத்து விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வடசென்னையில் உள்ள புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவமனை யில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டான்லி மருத்துவமனை டீன் பாலாஜி, சென்னை அரசு ஸ்டான்லிமருத்துவக் கல்லூரி மருத்துவ மனையை பொருத்தவரை உறுப்பு மாற்று சிகிச்சைகள் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றவர், மூளைச்சாவு அடைந்த நபர்களிடம் இருந்து மட்டும் இதுவரை 135 சிறுநீரகங்கள் தானமாகப் பெறப்பட்டு, தகுதியானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
கடந்த ஆகஸ்டு மாதத்தில் விபத்தில் சிக்கிய கூலித் தொழிலாளி ஒருவர் உயர் சிகிச்சைக்காக ஸ்டான்லிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இரு சிறுநீரகங்கள், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன. அதில் ஒரு சிறுநீரகம் 33 வயதான நபர் ஒருவருக்கு பொருத்தப்பட்டது.
இதுமட்டுமின்றி, நடப்பாண்டில் மட்டும் நோயாளிகளின் உறவினர்கள், மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து 27 சிறுநீரகங்கள் பெறப்பட்டு, அவை உரிய நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.
இவைதவிர அண்மையில் மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞர் ஒருவரின் கல்லீரல் தானமாகப் பெறப்பட்டு ஸ்டான்லி மருத்துவர்களால் 43 வயதுடைய நபருக்கு பொருத்தப்பட்டது.
இவ்வாறு கூறினார்.