மும்பை: சிறையின் மோசமான சூழலிலும், மனிதத்தன்மை மிளிர்வதாக, நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 83 வயதான மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி.

மும்பை அருகிலுள்ள டலோஜா மத்திய சிறையில், பிமா கொரேகான் வன்முறை வழக்கில் தொடர்புடைய குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ள 83 வயதான மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி, பார்க்கின்சன்ஸ் நோயால் அவதிப்படுவதால், அவரின் அன்றாட செயல்களை மேற்கொள்வதற்கே பிறரின் உதவி அவருக்கு தேவைப்படுகிறது.

மனித உரிமை செயல்பாட்டாளர்களான வரவரா ராவ் மற்றும் வெர்னான் கொன்சால்வ்ஸ் மற்றும் அருண் ஃபெரைரா, அதே சிறையில் வேறு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஸ்வாமியுடன், ஒரே அறையில் வேறு இரண்டு பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள்தான், அவர் தனது உணவை உட்கொள்ளவே உதவுகின்றனர். அவருக்கு, கேட்கும் திறன் கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. தண்ணீர் டம்ப்ளரைகூட அவரால் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால், ஸ்ட்ரா பயன்படுத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், நவம்பர் 28ம் தேதிதான் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில்தான், உடனிருப்போர் உதவியுடன் இந்தக் கடிதத்தை தன் நண்பர்களுக்கு எழுதியுள்ளார். மாலை 5.30 மணிமுதல் காலை 6 மணி வரையும், பிற்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையும் தாங்கள் சிறைக்குள் அடைக்கப்படுவதாகவும், வெளியிலிருக்கும் நேரங்களில் நண்பர்கள் சந்தித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வயதான, நோய்வாய்ப்பட்ட மனிதர், இப்படி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.