ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள துணிக்கடையில் 10 ரூபாய்க்கு ஒரு சேலை வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. இதன் காரணமாக அலைமோதிய மக்கள் கூட்டம் முண்டியடித்து உள்ளே செல்ல முயன்றதால், நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.

ஐதராபாத் அருகே உள்ளது சிஎம்ஆர் ஷாப்பிங் மால். இங்கு ஒரு சேலை 10 ரூபாய் என தள்ளுபடி விலைக்கு சேலை விற்பனை செய்யப்பட்டது. இந்த செய்தி காட்டுத் தீ போல பரவியதால் ஷாப்பிங் மாலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே அந்த ஜவுளிக்கடைக்கு பெண்கள் படையெடுக்க துவங்கியுள்ளனர். கூட்டம் அதிகரித்ததால், கடை நிர்வாகம் கடையின் ஷட்டரை மூடியது. இதனால் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் கடையின் ஷட்டரை உடைத்துக்கொண்டு உள்ளே போக முயற்சி செய்ததால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக  மக்கள் கூட்டம் அலைமோதியதை தொடர்ந்து, முதலில் குறிப்பிட்ட அளவிலான மக்களை கடைக்குள் அனுப்பிய கடை நிர்வாகம், ஷட்டரை இழுத்து மூடி மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தியது. ஆனால், 10 ரூபாய்க்கு சேலை வாக்கும் ஆசையில் முண்டியடித்த மக்கள், கடையின் ஷட்டரை தூக்கிவிட்டு, கடையினுள் மொத்தமாக சென்றனர். இதன் காரணமாக ஏற்பட்ட நெரிசலில் பலர் கீழே விழுந்தனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டதுடன், சில பெண்களின் நகைகள், பணம் திருடு போனதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த உள்ளூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தியதோடு, திருட்டு தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

[youtube https://www.youtube.com/watch?v=JtVZ54ohJIw]