மும்பை

காராஷ்டிர அரசின் அறிவிப்பின் படி இன்றுடன் ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி தினம் என்பதால் மதியம் வரை சுமார் 17,091 சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பை ஒட்டி நாடெங்கும் சென்ற வருடம் மார்ச் 25 முதல் முழு ஊரடங்கு அமலாகியது.   இதையொட்டி பல தொழில்கள் மற்றும் வர்த்தகங்கள் முடங்கின.  குறிப்பாக ரியல் எஸ்டேட் தொழில் பெரிதும் முடங்கி பல குடியிருப்புக்கள் விற்பனை ஆகாமல் தேங்கியது.   இந்த நிலை மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் அதிக அளவில் இருந்தது.

இதையொட்டி சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 26 அன்று மகாராஷ்டிர அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது.  அதன்படி மாநிலத்தில் உள்ள குடியிருப்புகள் விற்பனையின் போது ஸ்டாம்ப் வரி 5% ஆக இருந்தது 2020 டிசம்பர் 31 வரை 2% ஆகக் குறைக்கப்பட்டது.  மேலும் இந்த வருடம் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரையிலான கால கட்டத்தில் பதியப்படும் சொத்துக்களுக்கு ஸ்டாம்ப் வரி 3% ஆகக் குறைக்கப்பட்டது

இந்நிலையில் மகளிர் தினத்தன்று மகாராஷ்டிர அரசு பெண்கள் பெயரில் பதியப்படும் சொத்துக்களுக்கான ஸ்டாம்ப் வரியை மேலும் 1% ஆகக் குறைத்தது.  இன்று ஸ்டாம்ப் வரி குறைப்பின் கடைசி தினம் என்பதால் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏராளமான சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன.

இன்று பகல் வரை 17,091 சொத்துக்கள் பதியப்பட்டுள்ளன.  இன்று மாலைக்குள் அது 18500 ஆகலாம் என கூறப்படுகிறது.  கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பதியப்பட்ட 19600ல் இது 95% ஆகும்.   இந்த வருடம் ஜனவரி மாதம் 10,.442 சொத்துக்களும், பிப்ரவரி மாதம் 10,198 சொத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.