சென்னை: திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியின்று பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையைமீறி ஸ்டாலின் மகள் கிரிவலம் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தேர்தல் தேரத்தின்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் ஐடி ரெய்டு உள்பட பல நிகழ்வுகள் அரங்கேறிய நிலையில், தற்போது, திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமிக்கு சென்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்ய ஏப்.26 முதல் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அரசு அறிவித்தது. இதனால், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்ரா பவுர்ணமி தரிசனம் மற்றும் சித்திரை வசந்த உற்சவ தீர்த்தவாரியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
சித்ரா பவுர்ணமியையொட்டி இரவு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது வழக்கமானது. மாந்தோறும் கிரிவவலம் செல்வதை விட ஆண்டுக்கு ஒரு முறை வரும் சித்ரா பவுர்ணமியின்றி கிரிவலம் செல்வது மிகுந்த பலனை தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் லட்சக்கணக்கானோர் கிரிவலம் செல்வதை விரும்பி, திருவண்ணாமலைக்கு வருவர்.
ஆனால், கொரோனா காரணமாக, சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விதித்து உத்தரவிட்டிருந்தார். மேலும், கிரிவலப் பாதையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு, நேற்று முன்தினம், தடையை மீறி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் தடுத்து திருப்பி அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், ஆனால், மக்கள் யாரும் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சித்ரா பவுர்ணமி அன்று திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகனும், திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவருமான எ.வ.கம்பன் மற்றும் அவருடன் 2 பெண்கள் நள்ளிரவு கிரிவலம் சென்றுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சில காவல்துறையினரும், மப்டியில் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த படத்தில் உள்ள 2 பெண்களில், முகக் கவசம் அணிந்து காணப்படுபவர் ஸ்டாலினின் மகள் செந்தாமரை என்று கூறப்படுகிறது. அவருடன் சென்ற மற்றொரு பெண் மற்றும் கம்பன் ஆகியோர் முகக்கவசம் அணியவில்லை.
திமுக வெற்றிக்காக, சித்ரா பவுர்ணமியில் செந்தாமரை கிரிவலம் சென்றதாகவும், முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் சித்ர குப்தனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றார் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அவர் பதில் கூற மறுத்துவிட்டதாகவும், ஆனால், இது மேலிட உத்தரவு என்று பெயர் வெளியிட மறுத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதித்த மாவட்ட நிர்வாகம், ஸ்டாலின் குடும்பத்தினரை மட்டும் கிரிவலம் செல்ல அனுமதித்தது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சில அமைப்புகள் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விதிகளும், அறிவிப்புகளும் அப்பாவி பொதுமக்களுக்குத்தான், விஐபிக்களுக்கு கிடையாது,
ஆட்சிக்கு வரும் முன்னரே கருணாநிதி குடும்பத்தினர் அடாவடியை தொடங்கி விட்டனர்
என்றும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.