திமுக தலைவர் ஸ்டாலின், ஆன்மீக நகராம் திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து, மாரச் 25ம் தேதியான இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அதேநாளில், திமுகவின் கஜானாக்களில் ஒருவர் என்று சில மீடியாக்களால் வர்ணிக்கப்படும் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறையின் மீது, இந்நாட்டில் யாருக்கேனும் நேர்மறையான மதிப்பு இருக்குமா? என்று தெரியவில்லை. அது ஒருபக்கம் இருக்கட்டும்!

திமுகவின் நிதி பரிவர்த்தனை தொடர்பாக, மத்திய பாஜக அரசு கடந்த காலங்களில் பல மறைமுக அழுத்தங்களைக் கொடுத்து வந்தது பல செய்திகளாக வெளிவந்துள்ளன. ஆனால், இதுவரை வெளிப்படையான அதிரடியைக் காட்டாமல் இருந்தது. அப்படியிருக்கையில், இன்று நேரடியான நடவடிக்கையில் இறங்கிவிட்டது.

அதாவது, பாஜக, தனது முதல் வெளிப்படையான நடவடிக்கையையே அழுத்தமாக தொடங்கியுள்ளது என்ற பார்க்க வேண்டியுள்ளது. இனி, அடுத்தடுத்து அவர்களின் ரெய்டு நடவடிக்கைகளை வேறு வகைகளில் எடுத்துச் செல்வார்கள்!

ஆனால், திமுக தரப்பும் இதையெல்லாம் நிச்சயம் எதிர்பார்த்தே இருந்திருக்கும். எனவே, இதற்கு ஏற்றாற்போல் அவர்களும் பலவிதமான தயாரிப்பு நடவடிக்கைகளில் இருப்பார்கள் என்றே நம்பப்படுகிறது.