சென்னை:

‘ஸ்டாலின் கட்சியினரை அரவணைத்து செல்கிறார்’ அதுபோல அதிமுக தலைமை இல்லை என்று, அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமியும்  போர்க்கொடி தூக்கி உள்ளார். ராஜ கண்ணப்பனை தொடர்ந்து இவரும் வெளிப்படையாக அதிமுக தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளார். இதன் காரணமாக அதிமுக தலைமை ஆடிப்போய் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. ஆனால், அதிமுகவில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியல், அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே முன்னாள் எம்.பி.க்கள் பலருக்கு சீட் கொடுக்கப்படவில்லை என்பதால், பலர் அதிருப்தியில் மாற்று கட்சிகளுக்கு தாவலாமா என யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில், முன்னாள் அமைச்சரான ராஜ கண்ணப்பன் நேற்று ஸ்டாலினை சந்தித்து, அதிமுகவுக்கு எதிராக பிரசாரம் செய்யப்போவதாக அறிவித்து விட்டார்.

மேலும் பல முன்னாள்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், அதிமுக எம்.பி. கே.சி. பழனிச்சாமியும் தற்போது அதிமுக நிர்வாகிகள் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளார்.

அதிமுகவுக்கு எதிராக பாஜக குறித்து கருத்து தெரிவித்ததால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட  கே.சி.பழனிச்சாமி,சமீபத்தில்,  கோட்டைக்கு சென்று இபிஎஸ், ஓபிஎஸ்-ஐ சந்தித்தார். இது பரபரப்பாக பேசப்பட்டது,. கே.சி.பி. மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவார் என்று எதிர் பார்த்த நிலையில், தற்போது அதிமுகவை கடுமையாக சாடியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்  அனைவரையும் அரவணைத்து கட்சியைக் கொண்டு செல்கிறார். ஆனால் அதிமுகவில் இந்தத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி யவர், ஓபிஎஸ்ஸை நம்பிய நாங்கள் யாரும் பலனடையவில்லை என்று கடுமையாக சாடினார். 

ஆரம்பத்தில், ஓபிஎஸ்ஐ நம்பி நான், முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், நத்தம் விஸ்வநாதன் உள்பட பலர் வந்தோம். ஆனால், அதற்கான பலன் இல்லை என்றவர்,  இதில் பலன் அடைந்தது ஓபிஎஸ், கே.பி. முனுசாமி, பி.எச். பாண்டியன் மட்டும்தான் என்று தடாலடியாக கூறினார். இதன் காரணமாக அதிமுக மூத்த தலைவர்கள் கட்சி தலைமை மீது கடுமையான அதிருப்தியில் இருப்பது வெட்டவெளிச்சமாகி உள்ளது. இதன் காரணமாக அதிமுக தலைமை கலகலத்து போய் உள்ளது.

சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்பில், திமுக அபார வெற்றி பெறும் என அறிவித்துள்ளது, இது அதிமுக தலைமைக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல, அதிமுக அறிவித்துள்ள வேட்பாளர்களுக்கும் எதிராக பல இடங்களில் அதிமுகவினர் போர்க்கொடி தூக்கி வரும்  நிலையில்,  அதிமுக மூத்த நிர்வாகிகளின் அதிருப்தி கோஷங்களும் வலுத்து வருவதால், ஈபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் செய்வதறி யாது திகைத்து உள்ளனர்.

அதிமுகவின்  மூத்த அரசியல்வாதியான,   கே.சி.பழனிச்சாமி அதிமுக தலைமையை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், பொதுச்செயலாளர் மட்டுமே வேட்பாளர் படிவத்தில் கையெழுத்திடவேண்டும், ஒருங்கிணைப் பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி கட்சி விதிப்படி செல்லாது என தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி வரும் என்பது குறித்து  அதிமுக உள்பட அரசியல் கட்சிகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன.