நாகர்கோவில்:

மிழகத்தில் ஸ்டாலின்முதல்வராவார்… மோடி சிறைக்கு போவார்…. என்று பேசிய காங்கிரஸ் தலவர் ராகுல்காந்தி, மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்,  தமிழகத்தில் தொழில் துறையை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

நாகர்கோவிலில் இன்று மாலை நடைபெற்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற  தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசினார். அவரது பேச்சை, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தமிழில் மொழி பெயர்த்து பேசினார்.

ராகுல் பேசியதாவது,  தமிழகத்தில், அமைந்திருக்கும் காங்கிரஸ் – திமுக கூட்டணி மக்களுக்கான கூட்டணி என்றவர்,  பிரதமர் மோடி தமிழகத்தின் மொழி, கலாச்சாரம், வாழ்வாதாரத்திற்கு எதிரான நிலையை கொண்டு, அதை அழித்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற  தேர்தலில் தமிழக மக்களின் உரிமை குரல் ஒலிக்கும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் விரைவில் பதவியேற்பார் என்றார் உறுதியாக கூறினார்.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வருவது  மோடி ஆட்டிவைக்கும்  கைப்பாவை ஆட்சி என்றவர், கடந்த காலத்தில் திமுக – அதிமுக இடையே  போட்டி நிலவியது….இருபக்கமும் வலுவான தலைவர்கள் இருந்தனர். ஆனால், இப்போது  மத்திய அரசு தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி செய்து வருகிறது என்றவர், முன்பு  மத்தியில் தமிழகத்தின் கை ஓங்கியிருந்தது.. ஆனால், இப்போது மோடியின் கை ஓங்கியுள்ளது என்று குற்றம் சாட்டினார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு நிறுவனங்களையும்  இந்திய இறையாண்மைக்கு எதிராக சிதைத்து வருவதாக கூறியவர்,  ஒவ்வொரு மாநிலங்களுக்கும் நெருக்கடியை கொடுத்து ஆட்சியை அடக்க முயற்சி செய்து வருகிறார் என்றார்.

மோடி எங்கு என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், ஆனால், அது தமிழகத்தில் நடக்காது என்றவர், தமிழக மக்கள் தங்களை வேறொருவர் அடக்கி ஆளுவதை அங்கீகரிக்க மாட்டார்கள் என்றவர்,  தமிழக மக்கள் எப்போது உண்மையின் பக்கமே உள்ளனர். தமிழ் மக்களின் போராட்டம் உண்மை, தர்மம், நியாயத்திற்காக நடக்கும் என்று கூறினார்.

பிரதமர் மோடிக்கு  பொய் பேசுவதை தவிர வேறு எதுவும் தெரியாது  என்றும், கடந்த தேர்தலின் போது  வாக்காளர்கள் ஒவ்வொருக்கும்  ரூ. 15 லட்சம் கொடுக்கப்படும், 2 கோடி பேருக்கு  வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். ஆனால், அவர்  எதையும் நிறைவேற்றவில்லை என்று கூறியவர்,  இந்தியாவில் 45 ஆண்டுகள் இல்லாத வகையில் வேலை வாய்ப்பின்மை உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் வளர்ச்சியில் இரண்டற கலந்தவர் கருணாநிதி என்று கூறிய ராகுல் நான் பலமுறை கருணாநிதியை சந்தித்து இருக்கிறேன்… கருணாநிதியிடம் நிறைய பேச வேண்டும் என்று நினைத்து இருந்தேன்…. அவரை சந்தித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சி அளித்தது.. அவர் நம்முடன்தான் வாழ்ந்து வருகிறார் என்றும்,  கருணாநிதி திமுகவை இப்போதும் வழி நடத்தி வருகிறார் என்றும் உருக்கமாக பேசினார்.

தமிழக விவசாயிகள் தங்களது நலனக்காக டில்லியில் வந்து போராடினார்கள்… அவர்களை நான் நேரடியாக சந்தித்தேன்…அவர்களுடைய வலி தெரியும், அவர்களின்  உண்மையான நிலையை பார்த்து வருத்தம் அடைந்தேன் என்று கூறியவர்,  தமிழ்நாட்டில் தொழில்கள் தொடங்குவதற்கான அத்தனை வளங்களும் ஏராளமாக உள்ளன என்றார்.

இன்று நாடு முழுவதும் பல கோடி மக்களிடம் உபயோகப்படுத்தும் கைபேசிகள்  சீனாவில் தயாரிக்கப்பட்டது என்றவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், இதுபோன்ற மொபைல் போன்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்னும் நிலையை உருவாக்க தொழில் துறையை மேம்படுத்தி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும்,  நமது நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் குறைந்தபட்ச நிச்சயிக்கப்பட்ட வரு மானத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கூறிய ராகுல், எங்களுடைய வாக்குறுதி படி ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். மோடியோ, அவருடைய தொழில் நண்பர்களுக்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும் பணியாற்று கிறார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் அம்பானிக்கு ரூ. 30 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளார்…  இப்போது ஜம்மு காஷ்மீரும் அம்பானியின் வசம் சென்று விட்டது.

பிரதமர் மோடியால் நாடு இரண்டாக பிரிந்து காணப்படுகிறது.  ஒரு பக்கம் பணக்கார்கள் சொகுசாக வாழ்கிறார்கள், மறுபக்கம் விவசாயிகள் வருமானமின்றியும், இளைஞர்கள் வேலையின்றியும் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஒரே வரி, எளிமையான வரி அமலுக்கு வரும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தமிழகம் முக்கிய தொழில் மையமாகும். திருவள்ளுவர் கூறியதுபோல உண்மை வெல்லும்… அப்போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.