சென்னை: பிற மாநிலங்களைப் போல தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்தி, கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்திய புலன் விசாரணையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் நடக்கும் மாபெரும் ஊழல் அம்பலமாகியுள்ளது.
கொரோனா நோயாளிகளைக் குணப்படுத்த, தனியார் மருத்துவமனை வாங்கும் கட்டணங்களின் விபரம் தனியார் செய்தித் தொலைக்காட்சி நடத்திய புலனாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையின் குறிப்பிட்ட மருத்துவமனையில் அனுமதிக்க 3 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும், நாளொன்றுக்கு படுக்கை கட்டணமாக 1.5 லட்சம் செலுத்த வேண்டும் என்று மருத்துவமனை பணியாளர் நோயாளியின் உறவினர் எனக் கூறிக்கொள்ளும் செய்தியாளரிடம் தெரிவிக்கிறார்.
மேலும், நாளொன்றுக்கு மருத்துவர், செவிலியர் பாதுகாப்பு உடைகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் செலுத்தவேண்டும் என்றும் அந்த பணியாளர் அந்த உரையாடலில் தெரிவிக்கிறார். இந்தத் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதனைக் குறிப்பிட்டு எதிர்க்கட்சித் தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
கொரோனா நோய்த் தொற்று இந்த அளவுக்கு, தீவிரமாக பரவி வரும் வேளையிலும், தங்களிடம் கோவிட்-19 சிகிச்சைக்கு வரும் மக்களிடம் தனியார் மருத்துவமனைகள் அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்க அனுமதிப்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.
தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுவரும் பல்வேறு சலுகைகளை நேற்று உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிய நிலையில் இந்நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பிற மாநிங்களைப் போல தமிழக அரசும் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக ஒழுங்குமுறைப்படுத்தி, கடினமான இந்தச் சூழ்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.