ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வாழ்வா? சாவா? போராட்டத்தில் இருக்கிறார்.
பா.ஜ.க.கூட்டணியில் இருந்து பிரிந்த போதே அவருக்கு சனி திசை ஆரம்பித்து விட்டது.
ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடக்கிறது.அங்கு நான்கு முனை போட்டி.
தெலுங்கு தேசம், காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய நான்கு கட்சிகளும் தனித்து போட்டியிடுகின்றன.
இரு தேசிய கட்சிகளும் அங்கு சவலை குழந்தையாகவே உள்ளன.அந்த லிஸ்டில்- தெலுங்கு தேசமும் சேர்ந்து விடுமோ என்பது நாயுடுவின் கவலை.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் அங்கு அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. தினந்தோறும் மாற்றுக்கட்சிகளில் இருந்து அவரது கட்சியில் கூட்டம் கூட்டமாக ஆட்கள் சேர்ந்து வருகிறார்கள்.நேற்று கூட நடிகர் மோகன்பாபு – ஒய்.எஸ்..ஆர்.காங்கிரசில் சேர்ந்துள்ளார். ஆரம்பத்தில் இவர் தெலுங்கு தேசத்தில் இருந்தவர்.அந்த கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.
இந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியே வெல்வார் என அனைத்து கருத்து கணிப்புகளும் அடித்து சொல்ல –மிரண்டு போய் இருக்கிறார்- சந்திரபாபு நாயுடு.
கடைசி ஆயுதமாக அவர் நம்பி இருப்பது. தனது வெளி மாநில நண்பர்களை.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நேற்று –தெலுங்கு தேசத்தை ஆதரித்து கடப்பா , கர்னூல் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தார். இதன் மூலம் முஸ்லிம் வாக்குகளை அள்ளலாம் என்பது நாயுடுவின் நம்பிக்கை.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவு திரட்ட வரும் 31ஆம் தேதி மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆந்திரா வருகிறார். விசாகப்பட்டினத்தில் நாயுடுவுடன் இணைந்து மம்தா பிரச்சாரம் செய்கிறார்.
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆந்திரா செல்கிறார். அங்கு கணிசமாக வசிக்கும் தமிழர் ஓட்டுகளை அவர் பெற்றுத்தருவார் என எண்ணுகிறார் .சந்திரபாபு நாயுடு.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்ட தலைவர்களும் ஆந்திராவுக்கு படை எடுக்க உள்ளனர்.
—பாப்பாங்குளம் பாரதி