சென்னை:

காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க சட்டமன்ற  சிறப்புக்கூட்டத்தை உடன  கூட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு .க.ஸ்டாலின் முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நேற்று மத்திய அரசு நீர்வளத்துறை நடத்திய காவிரி மேலாண்மை வாரியம் குறித்த கூட்டத்தில், உச்சநீதி மன்றம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது தமிழகத்தில் முண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல்தலைவருமான மு.க.ஸ்டாலின்,  காவிரி ஆலோசனைக் கூட்டம் வெறும் கண் துடைப்பு நாடகம் என்றும் ஆலோசனைக் கூட்டத்தை கர்நாடக தேர்தல் லாபத்துக்காக மத்திய அரசு நடத்தியுள்ளது. எனவே, காவிரி விவகாரத்தில், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எனவே உடனடியாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதல்வர் பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைத்திட வேண்டும் என தமிழக அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

. ஆனால், அந்த தீர்மானத்தை பிரதமரிடம் நேரில் வழங்க நேரம் ஒதுக்கப்படாததை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அந்த சந்திப்பின்போதே, சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

ஆனால்  நேற்று மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு உறுதியாக தெரிவிக்காததோடு. உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ள வார்த்தை களை குறிப்பிட்டு காலம் தாழ்த்த மத்திய அரசு முயற்சிப்பது, மத்திய நீர்வளத்துறை செயலாளரின் பேச்சிலிருந்தே வெளிப்படுவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழகத்தின் உறுதியான நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வண்ணம், உடனடியாக சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் மறுபடியும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள 15ம் தேதி வரை காத்திருக்காமல், உடனடியாக சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.