சென்னை: எங்களுக்கு தலைமை ஆசிரியர் முதல்வர் ஸ்டாலின்தான் என சென்னையில் நடைபெற்ற திமுக சாதனை விளக்க கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

சென்னை பாடியில் திமுக சார்பில்  ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, திமுக பொருளாளர் டி ஆர் பாலு  ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “திமுக ஆட்சி பொறுப்பேற்றபோது சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட வில்லை என்றவர், ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்தது. அப்பொழுது வருவாய் பற்றாக்குறை 4.6% என இருந்தது. தற்போது முதல்வர் அதை 3.8% அளவிற்கு குறைத்துள்ளார். கடந்த 10 வருடம் பேரவையில் என்ன நடந்தது என்பது வெளியில் யாருக்கும் தெரியவில்லை. பேரவையில் என்ன என்ன நடக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக கொடுக்கப்படுகிறது.

அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகள் என யார் தவறு செய்தாலும் நேரடியாக முதல்வரிடம் தெரிவிக்கும் வகையில் `முதல்வரின் முகவரி’ எனும் திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர். அதில் இதுவரை 10,01,883 குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.  எங்கள் மீது மக்களாகிய நீங்கள் அனைவரும் வைத்த நம்பிக்கையை காப்பதற்கு திமுகவினர் அனைவருமே செயல்பட்டு வருகின்றோம்.

“எங்கள் எல்லோருக்கும் முதல்வர் ஸ்டாலின்தான் தலைமை ஆசிரியர். அவர் வகுக்கும் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் சாதாரண தபால்காரர் போலவே சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் உள்ளோம்” என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார்.