அரவக்குறிச்சி:
4சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தீவிரமாகி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து வீதி வீதியாக பிரசாரம் செய்து வருகிறார். இன்று காலை அங்கு விவசாயிகளை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அரவக்குறிச்சி தொகுதியில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, திமுக சார்பில் களமிறக்கப்பட்டு உள்ளார். அவருக்கு ஆதரவாக நேற்று முதல் வாக்கு சேகரித்து வரும் மு.க.ஸடாலின் இன்று அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட தவுட்டுப்பாளையம் பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து புகளூர் பகுதிக்கு வந்த ஸ்டாலின், அங்குள்ள வெற்றிலை விவசாயிகள் சங்க அலுவலகத்திற்குள் சென்று அங்குள்ள விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தது மட்டுமின்றி, அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்தார். அவர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். அப்போது ஸ்டாலினிடம் விவசாயிகள் ஏராளமான குறைகளை தெரிவித்தனர். அவர்களுக்கு பதில் தெரிவித்த ஸ்டாலின், வருகிற 23-ந்தேதிக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. பொறுப்பேற்றதும் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றார்.
தொடர்ந்து அந்த பகுதியில் சாலை வழியாக நடந்து சென்று வாக்கு சேகரித்த ஸ்டாலினுடன் பொதுமக்கள் குலுக்கியும், செல்பி எடுத்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.
தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு அரவக்குறிச்சி ஒன்றியம் நாகம்பள்ளி, வேலம் பாடி, இனுங்கனூர், பள்ளப்பட்டி பேரூராட்சியிலும் பிரசாரம் செய்கிறார். இரவு 7 மணிக்கு ஆலமரத்துப்பட்டி ஊராட்சியில் தனது பிரசாரத்தை முடிக்கிறார்.
இதைத்தொடர்ந்து முதல்கட்டத்தை பிரசாரத்தை நிறைவு செய்யும் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். பின்னர் 2வது கட்ட பிரசாரத்துக்கு வருகிற 14-ந்தேதி மீண்டும் ஒட்டப்பிடாரம் செல்கிறார். 15-ந்தேதி திருப்பரங்குன்றத்திலும், 16-ந்தேதி சூலூரிலும் பிரசாரம் செய்யும் அவர் 17-ந் தேதி அரவக்குறிச்சியில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.