சென்னை: திமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மனு கொடுத்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நேர்காணல் நடத்தினார். அப்போது, கொளத்தூர் தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரும் மார்ச் 10ஆம் தேதி முதல் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இதையொட்டி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளதுடன், போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்பமனுக்களை பெற்று வருகின்றனர்.
திமுக சார்பில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ந்தேதி சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டது. திமுகவின் முக்கிய தலைவர்கள் பலரும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தனர். அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி, கடந்த சில நாட்களுக்கு முன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். தி.மு.க. ஒதுக்கிய தொகுதிகள்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்.. ராகுல் நிலைப்பாடு என்ன! விருப்ப மனு தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை விருப்ப மனு அளித்தார்.
அதைத்தொடர்ந்து விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் மார்ச் 2ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக விருப்ப மனு கொடுத்தவர்களை அழைக்கப்பட்டு, தொகுதியில் வெற்றி வாய்ப்பு, தொகுதிக்கு அவர்கள் ஆற்றிய பணி, குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தி வருகின்றனர்.
நேர் காணலின் கடைசி நாளான இன்று சென்னை மாவட்டத்தில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்கு தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்திருந்தார். அவரிடம் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.‘
அதுபோல, கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு போட்டியிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விருப்ப மனு கொடுத்திருந்ததால் அவரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. ஸ்டாலினிடம் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேர்காணல் நடத்தினார். கொளத்தூர் தொகுதி வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி கேட்டார். அதற்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வேறு யாரும் விருப்பம் தெரிவிக்காத நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவது உறுதியானது.