சென்னை:
தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற அமளி காரணமாக திமுக உறுப்பினர்கள் 88 பேர் ஒரு வார காலம் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இதையடுத்து, அவர்களை சபைக்காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.
இதையடுத்து இன்று காலை வழக்கம்போல் சபை கூடியது. திமுக மீதான சஸ்பெண்ட் உத்தரவை வாபஸ் கோரி, சட்ட சபையில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகளை சேர்ந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரினர்.
ஆனால் தி.மு.க உறுப்பினர்கள் மீதான சஸ்பென்ட் உத்தரவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியாது என சபாநாயகர் அறிவித்து உள்ளார்.
இன்று காலை வழக்கம்போல் திமுக உறுப்பினர்கள் பேரவையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு வர முயன்றனர். பேரவையிலிருந்து திமுக உறுப்பினர்களை 1 வாரத்திற்கு சஸ்பென்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டிருந்ததால், திமுக உறுப்பினர்களை பேரவை வளாகத்தில் நுழைய அவைக் காவலர்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.
இதை தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக உறுப்பிர்கள் அனைவரும் பேரவையின் 4-ம் எண் வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இது குறித்து பேசிய சென்னை மாநகர முன்னாள் மேயரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்பிரமணியன், பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது திமுக உறுப்பினர்களின் நோக்கம் இல்லை என்றார்.
அதே சமயம் எதிர்கட்சித் தலைவர் அறைக்கு செல்ல கூடாது என எங்களை தடுப்பதில் நியாயம் இல்லை என சாடினார்.