சென்னை
ஆர் கே நகர் தேர்தலில் ரூ. 100 கோடி வரை பண பட்டுவாடா நடந்துள்ளதாக மு க ஸ்டாலின் கூறி உள்ளார்.
வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவுள்ள சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலில் பண பட்டுவாடா புகார் எழுந்துள்ளன. இது குறித்து தேர்தல் சிறப்பு அதிகாரி விக்ரம் பத்ரா அனத்துக் கட்சி பிரதிநிதிகளுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி உள்ளார். திமுக சார்பில் அவரை திமுகவின் செயல் தலைவர் முக ஸ்டாலின் அவருடைய கட்சிப் பிரமுகரிகளுடன் சந்தித்தார்.
ஆலோசனை முடிந்த பின் மு க ஸ்டாலின் செய்தியாளர்களிடம் உரை ஆற்றினார் அப்போது அவர், “அதிமுக மற்றும் தினகரன் அணியினர் இருவருமே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். திமுக வினர் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அதிமுக வினரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைக்கிறோம். ஆனால் காவல் துறையினர் அது ஒரு சில ஆயிரம் ரூபாய் மட்டுமே என செய்தியாளர்களிடம் சொல்கின்றனர்.
ஒரு ஓட்டுக்கு ரூ. 6000 வரை கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.100 கோடி வரை பணப் பட்டுவாடா நடந்துள்ளது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் உள்ள அமைச்சர்களின் மேற்பார்வையின் கீழ் அதிமுகவினர் பண விநியோகம் செய்துள்ளனர். இந்தப் பண பட்டுவாடா செய்வதை திமுகவினர் மொபைல் வீடியோவாக பதிவு செய்திருந்தனர். அதை தற்போது அதிகாரியிடம் அளித்துள்ளோம். திமுகவைப் பொறுத்தவரை பணப் பட்டுவாடா செய்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நடவடிக்கையை மட்டுமே கேட்டுள்ளது. தேர்தலை ரத்து செய்யக் கோரிக்கை அளிக்கவில்லை” எனக் கூறினார்.