அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ள கமலுக்கு ஸ்டாலின் அழைப்பு

Must read

சென்னை:

காவிரி பிரச்சினை குறித்து தனது தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சிக்கூட்டத்தில் கலந்துகொள்ள கமலுக்கு அழைப்பு விடுத்திருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிய கட்சி ஆரம்பிக்க இருக்கும் நடிகர் கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள் பலரை சந்தித்து வருகிறார்.

இந்த வரிசையில் சற்று முன் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்தார். கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் உடன் இருந்தார்.

சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “நடிகர் கமல்ஹாசன் என்னைத் தொடர்புகொண்டு, கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற வேண்டும் என்று தெரிவித்தார். அதன்படி வீட்டுக்கு வந்து கருணாநிதியிடம் வாழ்த்து பெற்றார். நானும் அவரை வாழ்த்தினேன்” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் அவர், “காவிரி பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று ஆளும் அதிமுக அரசுக்கு கோரிக்கை வைத்தேன். இதுவரை பதில் இல்லை. நாளைவரை பொறுத்திருந்து பார்த்து, எனது தலைமையிலேயே அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட இருக்கிறேன்.

இதற்கு தமிழக ஆளுங்கட்சியான அ.தி.மு.க. மத்திய ஆளுங்கட்சியான பாஜக உட்பட அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுப்பேன். அதே போல, நடிகர் கமல்ஹாசனுக்கும் இன்று நேரடியாக அழைப்பு விடுத்துள்ளேன்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

More articles

Latest article