சென்னை:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (08.03.17 – புதன்கிழமை) பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள் உள்பட) எழுதுகிறார்கள்.
மொத்தம் ஐந்து பாடங்களுக்கு ஏழு தேர்வுகள் நடக்க இருக்கின்றன. இந்த தேர்வு 30-ந் தேதி வரை நடைபெறவுள்ளது
12,187 பள்ளிகளில் நடக்கும் இந்தத் தேர்வை 4,98,406 மாணவர்களும் 4,95,792 மாணவிகளும் எழுதுகிறார்கள். அதாவது. மாணவிகள் எண்ணிக்கையை விட அதிகமாக 2,614 மாணவர்கள் எழுதுகிறார்கள்.
இவர்களில் 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகிறார்கள்.
சென்னையில் 571 பள்ளிகளில் இருந்து மொத்தம் 51,664 மாணவ-மாணவிகள் 209 தேர்வு மையங்களில் தேர்வு எழுத இருக்கிறார்கள். . இவர்களில் 25,280 மாணவர்கள் மற்றும் 26,384 மாணவிகள்.
சிறைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி சிறைவாசிகளில் 219 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் என மொத்தம் 229 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி, கோவை, புழல் மற்றும் வேலூர் ஆகிய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத இருக்கிறார்கள்.
தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6,19,721 ஆகும்.
தேர்வில் டிஸ்லெக்சியா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதோர்-வாய்பேச இயலாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) அளிக்கப்படுகின்றன.
இவர்களில் மாணவர் 2,653 மற்றும் மாணவிகள் 1,537 பேர்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள்-தேர்வர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து கொண்டுவரும் திட-திரவ நிலை உணவு வகைகளை பிறர் உதவியின்றியும் பிற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் உட்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 6,403 எண்ணிக்கையிலான பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது.
தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் தடை செய்யப்பட்டுள்ளது. இது கண்காணிப்பாளர்களுக்கும் ( ஆசிரியர்கள்) பொருந்தும்.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதப்போகும் 10, 38,022 மாணவ மாணியவருக்கும் patrikai.com இதழின் வாழ்த்துகள்!