டில்லி,
மேற்கு வங்கத்திலிருக்கும் பொதுநிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை மத்தியஅரசு உடனே கைவிடவேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய திரிணாமூல் கட்சி உறுப்பினர் எஸ் எஸ் ராய், இந்தியாவின் முதல் சுதேசி நிறுவனம் பெங்கால் கெமிக்கல்ஸ், பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிட்டெட் ஆகும். இதை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யவிருப்பது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.
இந்த நிறுவனம் சென்னை, கான்பூர், இந்தியாவின் ஐதராபாத், மும்பை,கட்டாக்,பாட்னா, டெல்லி ஆகிய நகரங்களில் அமைந்துள்ளது என்றும் இந்தியாவிலேயே இங்குதான் விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இதேபோல் மேற்கு வங்கத்திலிருக்கும் மற்றொரு பொது நிறுவனமான பிரிட்ஜ் அண்ட் ரூப் கம்பெனியையும் விற்க முயற்சிப்பதாக வரும் தகவல் உண்மையென்றால் அது கண்டிக்கத்தக்கது என்றார். இந்த இரண்டு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றால் அவற்றை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைவார்கள்.
எனவே மே.வங்கத்திலிருக்கும் பெங்கால் கெமிக்கல்ஸ், பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிட்டெட் மற்றும் பிரிட்ஜ் அண்ட் ரூப் நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.