சென்னை:

எஸ்ஆர்எம் மருத்துவ சீட் பண மோசடி வழக்கில்  வேந்தர் மூவிஸ் மதனுக்கு 20-ம் தேதி வரை காவலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எஸ்ஆர்எம் மருத்துவ பல்கலை கழகத்தில் மருத்துவ சீட் வாங்கித் தருவதாக ரூ80 கோடி வசூலித்து மோசடி செய்து,  அதை எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மாயமானார் மதன்.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் மதன் குடும்பத்தினரும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சார்பாகவும் தொடரப்பட்டன. மதனின் தாயார் தங்கமும் ஆட்கொணர்வு வழக்கும் தொடர்ந்தார்.

இதைதொடர்ந்து திருப்பூரில் பதுங்கி இருந்த மதன் கைது செய்யப்பட்டார். பின்னர் விசாரணைக்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் மதனை அமலாக்கத்துறை மீண்டும் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் ஜாமின் கேட்டு மதன் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி மதனுக்கு 20-ம் தேதி வரை காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.