சென்னை: கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம் என்று எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் மும்முரமாகி உள்ளன. இந்தியாவும் அதற்கான தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறது.

குறிப்பாக கோவாக்ஸின் தடுப்பூசியின் 2ம் கட்ட பரிசோதனை வரும் வாரங்களில் தொடங்கப்பட உள்ளது. அகில  இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஆதரவுடன் பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியது இந்த கோவாக்ஸின் தடுப்பூசி.

இந் நிலையில் தடுப்பூசி ஆராய்ச்சி எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது.  முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் தற்போது நல்ல ஆரோக்கிய நிலையில் இருப்பதாகவும், வரும் வாரங்களில், 2வது தடுப்பு ஊசி செலுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந் நிலையில், 18 வயது முதல் 55 வயதுக்கு உட்பட்ட, உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.