மங்களூரு: கம்பாலா விளையாட்டில் ஒரே தொடரில் 42 பதக்கங்கள் வென்று, கர்நாடக மாநிலத்தின் ஸ்ரீனிவாஸ் கவுடா சாதனை படைத்துள்ளார்.
கம்பாலா என்ற விளையாட்டு, கடலோர கர்நாடகா மற்றும் வடக்கு கேரள பகுதிகளில் விளையாடப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டு. இதில் கலந்துகொள்பவர் தன்னுடன், ஒரு ஜோடி எருமைகளையும் சகதி நிறைந்த பாதையில் ஓட்டிச்சென்று இலக்கை அடைய வேண்டும்.
இந்த ஆண்டு, வேனுாரில் நடைபெற்ற போட்டியில், கர்நாடகத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் கவுடா, நான்கு பதக்கங்கள் பெற்றார்.
அதனையடுத்து, தட்சிண கன்னட மாவட்டம் உப்பினங்கடியில் நடைபெற்ற விஜய விக்ரம கம்பாலாவில் மேலும் 3 பதக்கங்களை வென்றார். இந்தத் தொடரில் இதுவரை அவர் 42 பதக்கங்கள் பெற்றுள்ளார். இதன்மூலம், ஹக்கேரி ஷெட்டி என்பவர் இதற்குமுன்னர் ஒரே தொடரில் பெற்றிருந்த 32 பதக்கங்கள் என்ற முந்தைய சாதனையை ஸ்ரீனிவாஸ் முறியடித்துள்ளார்.
அத்துடன், இலக்கை மிக விரைவாக கடந்து சாதனை செய்துள்ளதால் நாட்டுப்புற விளையாட்டுகளின் ‘உசேன் போல்ட்’ என்று புகழப்படுகிறார். இந்த ஆண்டுக்கான இறுதி கம்பாலா போட்டிகள் வரும் 7ம் தேதி பெல்தங்கடியில் நடைபெறவுள்ளன.