தாந்த்ரி மலை, இலங்கை
இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு இஸ்லாமிய வாக்காளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இலங்கையில் இன்று அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி உள்ளது. சமீபத்தில் நடந்த தேவாலயத் தாக்குதல் காரணமாக கடுமையான பாதுகாப்பு இடப்பட்டுள்ளது. இந்த தேர்தலின் முடிவானது சிறுபான்மையினரான தமிழர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வாக்கைப் பொறுத்து அமையும் என ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
நேற்று பின்னிரவில் கொழும்பு நகரில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர் வடக்கே உள்ள தாந்த்ரி மலைப் பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை அளிக்கப் பேருந்துகளில் சென்றுக் கொண்டு இருந்துள்ளனர். இவர்கள் புத்தாலம் என்னும் கடற்கரை நகரில் வசிப்பவர்கள் ஆவார்கள். இவர்கள் வரும் பாதையில் பாதை தடுக்கப்பட்டு அங்கு சில டயர்கள் எரிந்துக் கொண்டிருந்தன.
இந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்ட உடன் மறைந்திருந்த சில நபர்கள் துப்பாக்கிகளால் பேருந்தை நோக்கி சரமாரியாகச் சுட்டுள்ளனர். அருகில் காவல் பணியில் இருந்த காவலர்கள் அங்கு வந்ததும் துப்பாக்கிச் சூடு நடத்திய அடையாளம் தெரியா நபர்கள் தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. சலைத் தடுப்பை அகற்றிய காவலர்கள் பேருந்துடன் காவலுக்குச் சென்றுள்ளனர்.