கொழும்பு

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின்  நடவடிக்கையை இலங்கைஅமைசர் சம்பிக்க ரனவக்க கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கை அரசுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்ட போது இந்தியா அதில் தலையிட்டது, அதையொட்டி கடந்த 1987ஆம் வருடம் இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் முக்கிய அம்சம் அதிகார பகிர்வு ஆகும். இதனால் தமிழர் பகுதியில் அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்திய அரசு விதி எண் 370 ஐ விலக்கி காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும் காஷ்மீர்  இரு யுனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் இந்தியாவின் தெற்கு எல்லை நாடான இலங்கை வெளியுறவு அமைச்சகம் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கருத்து தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இலங்கையின் மத்திய அமைச்சரும் சிங்கள தேசிய பாரம்பரியக் கட்சியின் தலைவருமான சம்பிக்க ரனவக்க காஷ்மீர்  விவகாரம் குறித்து,”கடந்த 1987 ஆம் வருடம் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அதிகார பகிர்வு குறித்த அம்சம் இடம் பெற்றிருந்தது. தற்போது காஷ்மீரை ஒப்பந்தத்தை மீறி தன்னுடன் இந்தியா இணைத்துக் கொண்டுள்ளது. எனவே இலங்கையின் அதிகார பகிர்வு பற்றிப் பேச இந்திய அரசுக்கு எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது.

இந்தியா இந்த பகுதியில் தன்னை வலுவான பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றிக் கொள்ள எண்ணுகிறது. இதனால் வளம் மிக்க காஷ்மீரை தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது. தற்போது இந்தியப் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் அவரை அதிக அதிகாரம் கொண்ட ஒரு அதிபராகத்தான் பார்க்க முடிகிறது. இந்தியாவின் இந்த இஸ்லாமியருக்கு எதிரான போக்காலிலங்கையில் உள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதிருப்தி அடைவார்கள். அதனால் அவர்கள் இந்தியாவுக்கு  எதிரான நடவடிக்கையில் இறங்கலாம். இதனால் தென் இந்தியா மட்டுமின்றி இலங்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது.”எனத் தெரிவித்துள்ளார்.