காரைக்கால்:

லங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 109 மீனவர்கள் இன்று தாயகம் திரும்புகின்றனர்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் 136 பேரைவிடுதலை செய்ய கடந்த 9ந்தேதி அந்நாட்டு அரசு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைத்தது.

அதன்படி,  தமிழகத்தின்  ராமநாதபுரம், நாகை, காரைக்கால், புதுக்கோட்டை மீனவர்களில் 109 பேர் இன்று தாயகம் திரும்புகின்றனர்.

இன்று காலை 11 மணி அளவில் அவர்களை அழைத்து வரும் இலங்கை கடற்படையினர் , சர்வதேச  எல்லையில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்க உள்ளனர். அவர்கள் இன்று பிற்பகல் 3 மணி அளவில் காரைக்கால் துறைமுகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

மீதமுள்ள 27 மீனவர்கள் மீதான வழக்குகள் விரைந்து முடிக்கப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி மீன் பிடிப்பதாக கூறி  தமிழக மீனவர்களை அவ்வப்போது இலங்கை ராணுவத்தினர் கைது செய்து வருகின்றனர். இதுகுறித்து நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் தமிழக மீனவர்கள் சார்பாக இந்திய அரசுக்கு பல்வேறு முறை கோரிக்கை விடப்பட்டும், இலங்கை அரசு தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா இந்தியா வர இருக்கிறார். இதன் காரணமாக நல்லெண்ண அடிப்படையில், தமிழக மீனவர்களை விடுதலை செய்ய  இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.