சர்வதேச அரங்கில் டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா பெற்றுள்ளார்.

‘யார்க்கர் மன்னன் என்றழைக்கப்படும் லஸித் மலிங்கா, பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர். மின்னல் வேகத்தில் வரும் அவரது பந்துகள், ஸ்டெம்புகளை துல்லியமாக தாக்கும். வேகம் தான் மலிங்காவின் ப்ளஸ் பாயின்ட். இந்திய ரசிகர்களுக்கு பும்ராவை போல, இலங்கை ரசிகர்கள் மட்டுமல்லாது உலக கிரிக்கெட் ரசிகர்கள் மலிங்காவை யாக்கர் மன்னன் என்று கொண்டாடி வருகிறார்கள். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியில் விளையாடிய போது மலிங்கா பந்து வீசுவதில் தனக்கு சில யோசனைகளை வழங்கினார் என்று பும்ராவே கூறியிருக்கிறார். சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வுகளை அறிவித்து வரும் மலிங்காவின் பந்துவீச்சில், முன்பு போல வேகம் இல்லை. ஆனாலும் தனது அனுபவத்தால் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார். 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணிக்கு தனது அனுபவத்தின் மூலம் பந்துவீச்சில் நெருக்கடியை கொடுத்தார். இறுதி ஓவரை வீசிய மலிங்கா மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார்.

சமீபத்தில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான தொடருடன் தனது ஓய்வை முடிவை அறிவித்த மலிங்கா, டி20 போட்டிகளில் தாம் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்திருந்தார். அடுத்தாண்டு நடக்கவுள்ள உலகக்கோப்பை டி20 போட்டியைக் கருத்தில் கொண்டு, மலிங்கா இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. நியூசிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அப்போட்டியில் மலிங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் டி-20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை மலிங்கா பெற்றிருந்தார். அத்தோடு, சர்வதேச அரங்கில் மலிங்கா 99 விக்கெட்டுகளையும் வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறியிருந்தார்.

இந்நிலையில், நியூசிலாந்து – இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில், ஒரு விக்கெட்டை கைப்பற்றினால் மலிங்கா டி-20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். அதனால், இலங்கை ரசிகர்கள் மலிங்காவின் சாதனையை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் மலிங்கா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். முதலில் பேட் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது.

சுலபமான இலக்கை எதிர்நோக்கி களம் கண்ட நியூசிலாந்து அணி, முதலில் மலிங்காவின் பந்துவீச்சையே எதிர்கொண்டது. மலிங்கா வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. 2வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்களை நியூசிலாந்து குவிக்க, மீண்டும் மலிங்கா பந்துவீச அழைக்கப்பட்டார். 3வது ஓவரை வீசிய மலிங்கா, முதல் இரு பந்துகளை டாட் பந்துகளாக கொடுத்தார். அதன் பின்னர் வரிசையாக நியூசிலாந்து நட்சத்திர ஆட்டக்காரர்களான முன்ரோ, ரூதர்ஃபோர்ட், கிராண்ட்ஹோம்மை, ராஸ் டெய்லர் என நான்கு பேரை, அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார். இதனால், இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து, இலங்கையிடம் 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 4 ஓவர்கள் வீசியுள்ள மலிங்கா, வெறும் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தனது அசுர விக்கெட் வேட்டையின் மூலம், சர்வதேச அரங்கில் டி20 போட்டியில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் வீரர் என்ற பெருமையை மலிங்கா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.