நியூயார்க்:
போர்க் காலத்தில் நடந்த அத்துமீறல்களுக்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்து ஐநா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 40-வது கூட்டம் கடந்த மார்ச் 22-ம் தேதி முடிந்தது.
இந்த கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் நடவடிக்கை தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளில் அங்கு ஏதேனும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா என்ற ஆய்வு நடத்தப்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இலங்கையில் நடந்த போரில், அத்துமீறல்கள் மற்றும் போர் குற்றம் புரிந்தோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள மேலும் 2 ஆண்டுகள் கால அவகாசம் தந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2012 முதல் ஐநாவின் மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு எதிராக 6 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் எவ்வித பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில், மேலும் ஒரு தீர்மானம் நிறைவேற்ற என்ன பயன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த தீர்மானங்களை இலங்கை அதிபர் மைத்ரிபால சிரிசேனா ஒரு பொருட்டாக மதிக்கவில்லை என்பதை கடந்த கால நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.