கொழும்பு:

ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப் படங்களை இலங்கை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.


இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 360 பேர் கொல்லப்பட்டனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை போலீஸ் கோரியது.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 76 பேரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ராணுவத்தின் உதவியுடன் தொடர்ந்து தேடுதல் வேட்டையை போலீஸார் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 3 பேரின் புகைப் படங்களை இலங்கை போலீஸார் வெளியிட்டனர்.

இது குறித்து இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர் ரூவான் விஜேவர்தனே கூறும்போது, பெரும்பாலான மனித வெடிகுண்டுகளாக செயல்படுபவர்கள், வசதி படைத்தவர்களாகவும் வெளிநாடுகளில் படித்தவர்களாகவும் உள்ளனர்.

மனித வெடி குண்டாக செயல்பட்டவர்களில் ஒருவர் இங்கிலாந்தில் இளநிலை பட்டமும், ஆஸ்திரேலியாவில் முதுநிலை பட்டமும் பெற்றவர். இவர்கள் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றார்.

100 பேர் பலி

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 100 பேர்தான் உயிரிழந்தார்கள் என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்ததும் 253 பேர் கொல்லப்பட்டதாக அறிவித்த இலங்கை அரசு, தற்போது 100 பேர்தான் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்துள்ளனர்.

எண்ணிக்கையில் தவறு நடந்துவிட்டதாக விளக்கம் தரப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை வியாழக்கிழமை நிறைவடைந்த பிறகுதான் சரியான எண்ணிக்கை தெரிந்ததாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தையொட்டி , நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் தங்கள் மீது எதிர் தாக்குதல் நடத்தப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

இதற்கிடையே, உளவுத்துறையின் அலட்சியமே இத்தகைய தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு காரணம் என இலங்கை பாதுகாப்புச் செயலர் ஹேமஸ்ரீ ஃபெர்ணான்டோ கூறியுள்ளார்.

உடலை வாங்க மறுப்பு

இலங்கை இஸ்லாமிய சங்கத்தினர் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில், மனித வெடி குண்டுகளாக செயல்பட்டவர்களின் உடல்களை ஏற்கமாட்டோம் என்றும், மசூதிகளில் அடக்கம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.