சென்னை: தமிழக மீனவர்களை கைது செய்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியும் இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் செய்து வருகின்றனர். இதுகுறித்து, மீனவர் சங்க பிரதிநிதிகள் இன்று தமிழக முதல்வரை சந்தித்து பேசினார்.
தமிழகத்தை சேர்ந்த நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது, நள்ளிரவு அந்த பகுதியில் ரோந்து வரும் இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல நடத்துவதும், பலரை கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே பல மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளனர். இந்த நிலையில், நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில், படகு கடலில் மூழ்கியதுடன், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏழு மீனவர்களையும், மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள் காப்பாற்றியதை அடுத்து, அனைவரும் கரை சேர்ந்துள்ளனர்.
இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீதும், படகுகள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவதாகவும், மத்திய, மாநில அரசுகள் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கடலில் மூழ்கிய விசைப்படகிற்கு இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் மட்டுமின்றி படகுகள், வலைகள் இலங்கை கடற்படையினரால் சேதப்படுத்தப்படுவது தடுத்த நிறுத்தப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்தியஅரசை வலியுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.