இலங்கை: 
லங்கையில்   கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து புதிய நாடாளுமன்றத்தில் மாஸ்க்குகள் கட்டாயம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்துள்ளனர்.
இருபத்தி ஒரு பக்க செயல்பாட்டு வழிகாட்டுதலின் அறிக்கையை சுகாதாரத்துறை இயக்குனர் அணில் ஜஸ்சங்கே பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிகா தசநாயக்கேவிடம் ஒப்படைத்தார். இதில் கொரோனா வைரஸ் தொடர்பான பல சுகாதார விதிமுறைகள் இருந்தன.
அறிக்கையில் உள்ள வழிகாட்டுதலின்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.
உடல்ரீதியாக தொடர்பு கொள்ளும் விதத்தில் கைகுலுக்கவோ, கட்டி பிடிக்கவோ அல்லது உடல்ரீதியாக தொடர்பு கொள்ளும் விதத்தில் ஒருவருக்கொருவர் வாழத்தவோ கூடாது. அதற்கு மாறாக அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்காக நியமிக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் சானிடைசர் வைக்கப்படும். உள்ளே வருபவர் அதை பயன்படுத்தி விட்டு தான் உள்ளே வரவேண்டும்.
கட்டிடத்தின் நுழைவுவாயிலில் வெப்பநிலை சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு நாளில் 225 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டியிருக்கும், ஏனெனில் அந்த தினத்தில் புதிய சபாநாயகரின் தேர்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் பதவியேற்பு நடைபெறும்.
வாக்கெடுப்பு நடைபெற வேண்டிய நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கூட்டத்தை வைத்துக் கொள்வது சாத்தியமா என்று நாடாளுமன்றம் விவாதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.