கொழும்பு,
இலங்கையில் பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இலங்கையில் பிரதமர் விக்கிரமசிங்கேவின் மாளிகையில் அரசு சார்பில் தேசிய தீபாவளி விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ஜனாதிபதிக்கு தமிழ்பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதையடுத்து நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் ஏராளமான தமிழர்கள் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே, ஜனாதிபதி மைத்ரிசிறிசேனா தமிழர்களுக்கு தீபாவளி வாழ்த்து செய்தி கூறியது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், ஆஸ்திரேலியாவில் தீபாவளி பண்டிகை ஆடல் பாடலுடன் கொண்டாடப்பட்டது. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இந்திய சமூகங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த இந்திய மக்கள் ஒன்று கூடி தீபாவளி திருநாளை கொண்டாடினர். பிரின்ஸ்பேன் நகரிலும் செயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மேளதாளங்கள் முழங்க, கலாச்சார நடனங்கள் அடங்கிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்திய சமூகங்களின் கூட்டமைப்பு தலைவர் பழனிச்சாமி, ஆஸ்திரேலிய அமைச்சர், எம்பிக்கள், வெளியுறவு துறை அமைச்சக அதிகாரிகள் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.