கொழும்பு: ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை விரும்பவில்லை, அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என கூறி இலங்கையில்  போராட்டம் தொடர்ந்து வருவதால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இலங்கை அதிபராக இருந்த கோத்தபய பதவி விலகி கோரி நடைபெற்ற போராட்டம் கடந்தவாரம் உச்சமடைந்தது., காவல்துறையினரின் தடுப்புகளை மீறி அதிபர் மாளிகைக்குள் போராட்டக் காரர்கள் புகுந்தனர். இதனால், கோத்தபய அங்கிருந்து தலைமறைவான நிலையில், இன்று அதிகாலை மாலத்தீவுக்கு சென்று தஞ்சமடைந்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி உள்ளார்.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் அதிபர் மறை ஒழிக்கப்பட்டு, அந்த அதிகாரங்கள் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என  வலியுறுத்தி வருகின்றனர். நாட்டின் முக்கிய அனைத்து துறைகளையும் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும்,  பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சியை  கருத்தில் வைத்து இடைக்கால அரசு உருவாக்கப்பட வேண்டுமெனகோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் அதிபர் பதவி விலகிவிட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதால்,  போராட்டம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தின் மீது கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கடும் கோபத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

ராஜபக்சேக்கள் வெளிநாடு தப்பிச்செல்வதை நாங்கள் இதனை விரும்பவில்லை, கோத்தபயவை நாட்டிலேயே வைத்திருக்க நாங்கள் விரும்புகின்றோம்.  அவர்களை திறந்த வெளிச் சிறையில் அடைக்க விரும்புகின்றோம், அவர்கள் அங்கே விவசாய நடவடிக்கையில் ஈடுபட முடியும்,  கொள்ளையிடப்பட்ட எங்களுடைய பணம் எங்களுக்கு மீண்டும் வேண்டும் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நபர்கள் தெரிவித்து உள்ளனர்.  ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச மாலத்தீவிற்கு தப்பிச் சென்றது மிகவும் மோசமான விசயம் என்றும், இங்கு போலவே அங்கும் ஊழல்கள் நிறைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றே பதவி விலக வேண்டும் என்று கொழும்பு காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.  இல்லையென்றால் இலட்சக்கணக்கான மக்களுடன் இன்று  முழு கொழும்பையும் சுற்றிவளைப்போம்  என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இலங்கையில் அவசர நிலையை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே பிரகடனம் செய்தார். விரைவில் ரணிலும் பதவி விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.