கொழும்பு: கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், ராஜபக்சே குடும்பத்துக்கு எதிராக பொதுமக்கள் போராடி வரும் நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய சகோதரர் பசில் ராஜபக்சே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், ஆட்சியாளர்கள் பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி, மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில் வேறுவழியின்றி பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இலங்கையின் அம்பந்தோட்டையில் உள்ள மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் பூர்வீக இல்லத்துக்கு மக்கள் தீ வைத்தனர். அப்பகுதியில் உள்ள ராஜபக்சேவின் தந்தை டி.ஏ.ராஜபக்சேவின் நினைவிடத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தி னர். குருனேகலா என்ற இடத்தில் உள்ள மகிந்த ராஜபக்சே இல்லமும் தீக்கிரையானது.

இதைத்தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தினர், பலர் வெளிநாடு தப்பிச் சென்றதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில், அவரது மற்றொரு சகோதரர் பசில் ராஜபக்சே தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  இலங்கை நாடாளுமன்ற செயலாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை பசில் ராஜபக்சே வழங்கியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்சேவின் சகோதரரான பசில் ராஜபக்சே அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், எம்.பி பதவியை துறந்தாலும், அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என பசில் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கத்தில் இருந்து விலகிய செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் பசில் ராஜபக்ச ஆவார்.