நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதியளித்துள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்திருக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஓசைன் அமீர் அப்துல்லாய்ன் இருநாட்டு உறவு மற்றும் வர்த்தகம் குறித்து பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

சமீபத்தில் நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா அவதூறாக பேசிய பிறகு இஸ்லாமிய நாடுகளில் இருந்து இந்தியா வந்துள்ள முதல் வெளிநாட்டு பிரதிநிதி ஓசைன் அமீர் அப்துல்லாய்ன்.

இந்த விவகாரம் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர் இது போன்ற சம்பவங்கள் இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்திவிடக் கூடாது என்றும் இதனை முறியடிக்க இந்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஈரான் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை-யும் அவர் சந்தித்ததாகவும், “நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும்” என்று அஜித் தோவல் உறுதியளித்ததாக ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஈரான் வெளியுறவுத் துறையின் இந்த அறிவிப்பு குறித்து இந்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.