திருவனந்தபுரம்: தங்கக்கடத்தலில் முதல்வருக்கும், அவரது குடும்பத்தினருக்கும்  தொடர்பு இருப்பதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ள நிலையில்,  பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கேரளாவில் இளைஞர் காங்கிரசார் மற்றும்  மகிளா காங்கிரசார்  இன்று சாலையில் திரண்டு போராட்டம் நடத்தினர். மகிளா காங்கிரசார் பிரியாணி வழங்கி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர்.

கடந்த 2020ம் ஆண்டு கேரளாவில் தூதரம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.  சட்டவிரோதமாக 30 கிலோ தங்கம் கடத்திய வழக்கில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் மீது உபா சட்டத்தின் கீழ் என்ஐஏ போலீசார் வழக்கு பதிந்து இருந்த நிலையில் அண்மையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, சமீபத்தில் நீதிமன்றத்தில் ஆஜரான ஸ்வப்னா சுரேஷ், வழக்கு தொடர்பாக பல உண்மைகளை  தெரிவித்தார். அப்போது, இந்த தங்கக்கடத்தலில், முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி கமலா, முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு உள்ளதாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த பினராயி விஜயன், தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன்  பொய் புகார் கூறப்படுவதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி, காங்கிரசார் பினராயி விஜயனை பதவி விலக வலியுறுத்தி போராடி வருகின்றனர். கேரள தலைநகர்  திருவனந்தபுரத்தில்  இன்று கட்சி கொடியுடன் திரண்டு இளைஞர் காங்கிரசார் சாலையில், கோஷங்களை எழுப்பியபடி தலைமைச்செயலகத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை சாலை தடுப்பு அமைத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, சாலை தடுப்ப அகற்றும் முயற்சியில் இளைஞர் காங்கிரசாசார் ஈடுபட அவர்கள்  போலீசார் தண்ணீர் பீய்ச்சியடித்து அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு நிலவியது. அதுபோல மகிளா காங்கிரசாரும் சாலையில் இறங்கி போராடியதுடன், பொதுமக்களுக்கு பிரியாணி பொட்டலம் வழங்கி நூதன முறையில்  பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில், ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டை முன்னாள் மந்திரி கே.டி. ஜலீல் மறுத்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், பா.ஜ.க. மற்றும் யு.டி.எப். சதி என்றும்  தற்போதைய அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி நடக்கிறது என்று தெரிவித்தார். இதுதொடர்பாக திருவனந்தபுரம் கண்டோன்மென்ட் போலீசில் புகாரும் அளித்துள்ளார். இது தொடர்பாக துணை இயக்குனரின் சட்ட ஆலோசனை யின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஸ்வப்னா சுரேஷ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 மற்றும் 120 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகாரை விசாரிக்க ஏ.டி.ஜி.பி. தலைமையில் போலீஸ் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.