மாலே

மாலத்தீவுகளின் முதல் விண்வெளி பாடத் திட்டத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பெண் ஸ்ரீமதி கேசன் குறித்து இங்குக் காண்போம்.

உலகெங்கும் உள்ள அனைத்து சிறிய மற்றும் பெரிய நாடுகளில் விண்வெளி ஆய்வு என்பது மிகவும் முக்கியமானதாகி உள்ளது.  மாலத்தீவில் இன்ஸ்டிடியூட் ஆஃப் குளோபல் சக்சஸ் (ஐஜிஎஸ்) என்னும் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது.  இந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்கி நடத்த அந்நாட்டின் பொறியியல் மற்றும் விஞ்ஞான நிபுணர்கள் தங்கள் பங்கை அளித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் கடந்த நவம்பர் மாதம் இங்கிலாந்தின் கே எஃப் எஸ் ஸ்பேஸ் ஃபவுண்டேஷன் பங்களிப்புடன்  விண்வெளி குறித்த பாடத்திட்டம் தொடங்கப்பட்டது.   இதில் தற்போது திட்ட இயக்குநராக இந்தியாவைச் சேர்ந்த பெண் நிபுணரான ஸ்ரீமதி கேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.   அவர் ஏற்கனவே பல விண்வெளி திட்டங்களுக்குத் தலைமை வகித்துள்ளார்.

ஸ்ரீமதியின் தலைமையிலான குழுவினால் நாசாவில் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு உலகின் மிகச் சிறிய செயற்கைக் கோள் ஏவப்பட்டுள்ளது.  அது மட்டுமின்றி உலகின் மிக எடைக் குறைவான கலாம்சாட் வி2 என்னும் செயற்கைக் கோளை 2019 ஆம் வருடம் நாசா ஏவியதிலும், இவர் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.  இதைப் போல் இஸ்ரோவின் ச்தீஷ் தவான் செயற்கைக் கோள் உள்ளிட்ட பல திட்டங்களில் இவர் பங்கேற்றுள்ளார்.

இதற்கு முன்பு இந்த பிரிவில் கய்யாலி முகமது என்னும் கே எஃப் எஸ் நிறுவனத் தலைவர் திட்ட ஆலோசகராகப் பணி புரிந்துள்ளார்.  தற்போது ஸ்ரீமதி கேசன் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.   இந்த பாடத் திட்டத்தின் கீழ் 12 உள்ளூர் மாணவர்கள் இணைந்து உலகின் முதல் நானோ செயற்கைக்கோளை உருவாக்க உள்ளனர்.  அவர்களுக்கு அமெரிக்காவின் கே எஃப் எஸ் நிறுவனம் இதில் உதவி புரிந்து சான்றிதழ்களை வழங்க உள்ளது.