மாஸ்கோ

ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி 92% திறனுள்ளதாகவும் பக்கவிளைவுகள் அற்றது எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.

உலகெங்கும் பல நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டறிவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.  இதில் அமெரிக்க நிறுவனமான பிஃபைஸர் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி சோதனை முடிந்து ஒப்புதலுக்கு விண்ணப்பித்துள்ளது.   அடுத்ததாக ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசி தயார் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஸ்புட்னிக் வி தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகள் பெலாரஸ், அரபு அமீரகம், வெனிசுலா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியாவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.   இந்த மருந்து முதியோருக்கும் அளிக்கப்பட்டுச் சோதிக்கப்பட்டு வருகிறது.

மூன்றாம் கட்ட சோதனையில் 40000 ஆர்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இதில் முதல் டோஸ் அளிக்கப்பட்ட 16000 பேருக்கு 21 நாட்கள் கழித்து இரண்டாம் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது.  இந்த சோதனையில் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 92% திறனுள்ளதாகவும் பக்கவிளைவுகள் அற்றதாகவும் உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுவரை ரஷ்யாவில் உள்ள 29 மருத்துவ மையங்களில் 20000க்கும் அதிகமானோருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி முதல் டோஸ்  அளிக்கப்பட்டுள்ளது.  இதில் 16000க்கும் அதிகமானோருக்கு முதல் மற்றும் இரண்டாம் டோஸ் அளிக்கப்பட்டுள்ளது.