சென்னை, செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம், குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என்றும், இருமொழி கொள்கையே தமிழ்நாட்டின் கொள்கை என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டள்ளது. இதை சபாநாயகர் வாசித்தார்.
ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கயிருந்த நிலையில், தேசிய கீதம் இசைக்கவில்லை என்று தெரிவித்து, ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். Advertisement இதனையடுத்து, ஆளுநர் உரையை அவர் படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர், ஆளுநர் உரையை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார். தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளதாவது,,
முதலமைச்சரின் அயராத உழைப்பினால், கடந்த நிதியாண்டில் 11.19 சதவீதம் என்ற உயரிய பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு எய்தியுள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இத்தகைய உயர் வளர்ச்சியை நமது மாநிலம் அடைவது இதுவே முதன்முறை. இதன் மூலம் பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் முயற்சியால் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி, இதுவரை இல்லாத அளவிற்கு எட்டி உள்ளது. தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2.23 குடும்பங்கள் பயன் பெறும் வகையில் தலா 3,000 ரூபாய் ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; இடைநிற்றல் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் நாட்டிலேயே உயர்கல்வி படிப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
சமுதாயத்தில் பெண்களின் உயர்த்திடவும் அவர்களின் உரிமையை நிலைநாட்டும் உயரிய நோக்கத்துடனும் அறிமுகப்படுத்தப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்’ மூலம் ஒரு கோடியே முப்பது இலட்சம் பெண்கள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1,000 உரிமைத் தொகையாகப் பெறுகின்றனர். மகளிரின் சமூகப் பங்களிப்பினை அங்கீகரித்து அவர்களின் அவசியத் தேவைகளை நிறைவு செய்திட உதவும் இத்திட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்திற்காக, இதுவரை ரூ. 33,464 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை மனுக்களை உடனுக்குடன் தீர்த்து வைப்பதை இந்த அரசு பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்தே முதன்மைக் கடமையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. முதல்வரின் முகவரி எனும் துறை இணையதளம், கைப்பேசிச் செயலி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1100 உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பெறப்படும் மனுக்களுக்குத் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டு, மனுதாரர்களுக்கு அவர்கள் மனுவின் நிலையினைத் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மகளிர் மேம்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அளப்பரிய பல சாதனைகளை செயல்படுத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 1.30 கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. பணிபுரியும் மகளிருக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கும் நோக்கில் தொழி விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இதன் பயனாக, இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் பணிபுரியும் தமிழ்நாட்டு பெண்கள் எண்ணிக்கை 40.3% ஆக உயர்ந்துள்ளது.
முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக் குழு இயக்கம், திராவிட மாடல் ஆட்சியில் ஆல்போல் தழைத்து, இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 4.9 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் 1 லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
குடிசை இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ரூ.900 கோடி செலவில் அரசு கல்லூரிகளில் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 36 கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அதேபோல் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 4,432 பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் பாதுகாப்பான குடிநீரை, தனிப்பட்ட குழாய் இணைப்புகள் மூலம் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், மாநில அரசின் நிதியிலிருந்து மட்டும் 1 கோடியே 12 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.3,112 கோடி நிதி இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் புதிய திட்டங்களுக்கும் ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதில்லை.

திராவிட மாடல் ஆட்சியில் ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
பழங்குடியின மக்களுக்காக ரூ.315 கோடி செலவில் 7,255 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
சிறப்பு தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.140 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் அயலகக் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.36 லட்சம் கல்வி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
* ‘காலனி’ என்ற சொல் நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரித்துள்ளதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டத்தால் 19 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 10 லட்சம் மாணவர்களுக்கு ரூ.2172 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை செம்மஞ்சேரியில் ரூ.216 கோடி மதிப்பீட்டில் உலகத் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கு ஒருங்கிணைந்த விளையாட்டு அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியது வருத்தமளிக்கிறது. மெட்ரோ ரயில் விவகாரத்தில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.
அரசுப் பணியாளர்களின் நலன் காப்பதில் எப்போதும் அக்கறையுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசானது, அவர்களின் இருபத்து இரண்டாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அவர்களின் கடைசி மாத ஊதியத்தில் சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாகவும், தகுதிவாய்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஓய்வூதியதாரர்கள் பெற்று வந்த ஓய்வூதியத்தில் 60 சதவீதத்தை குடும்ப ஓய்வூதியமாகவும், ஆண்டுதோறும் பணியிலுள்ள அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படுவதற்கு இணையான அகவிலைப்படி உயர்வு மற்றும் ரூ. 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்குதல் உள்பட பல்வேறு அம்சங்களுடன், பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு நிகரான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தினை’ (TAPS) அரசு செயல்படுத்தியுள்ளது. மேற்கூறிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவதால், ஓய்வூதிய நிதியத்திற்கு முதற்கட்டமாக ஒருமுறை பங்களிப்பாக ரூ. 13,000 கோடியும், மேலும், ஆண்டுதோறும் அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ. 11,000 கோடி நிதியையும் தமிழ்நாடு அரசு வழங்கும்.
தமிழ்நாடு அரசு சந்தித்து வரும் கடுமையான நிதி நெருக்கடியிலும், அரசுப் பணியாளர்களின் நலன்களைக் காத்திடும் பொருட்டு, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை நான் மனமாரப் பாராட்டுகிறேன். அதேபோன்று சிறப்புக் காலமுறை ஊதிய முறையில் பணியாற்றி வரும் பணியாளர்களின் சிறப்பு ஓய்வூதியம் குறித்த பல்வேறு கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து உரிய ஆணைகளை விரைவில் வெளியிடும் என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மத்திய அரசு எதிர்மறை மனப்பான்மையுடன் மாநில அரசை அணுகி வருவதால், மாநில அரசிற்கு உரிய திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவது கவலைக்குரியது. தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் பல்வேறு திட்டங்களுக்கு, மாநில அரசின் கொள்கைகளுக்கு எதிரான நிபந்தனைகளை மத்திய அரசு விதித்து, அத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் பெருந்தடைகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அத்திட்டங்கள் முற்றிலும் முடங்கும் சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. இது, மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக உள்ளது.
இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து இம்மாமன்றம் பல்வேறு காலங்களில் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. இவ்வரசு பொறுப்பேற்றதற்குப் பின்னர், 2022 ஆம் ஆண்டு, ‘மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசினை வலியுறுத்தி இப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், தற்போது அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் மூன்றாம் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கையை மறைமுக இந்தி மொழித் திணிப்பாக மட்டுமே இவ்வரசு கருதுவதோடு, இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என மத்திய அரசை இவ்வரசு வலியுறுத்துகிறது.
என்றுமே இருமொழிப் பாடத்திட்டமே தமிழ்நாட்டின் கொள்கை என்பதை, திராவிட மாடல் அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை உறுதியாக எடுத்துரைக்கிறது. இவ்வகையில் உயர்தனிச் செம்மொழியின் பெருமையினை உலகறியச் செய்திடவும், தமிழ்நாட்டின் உரிமைகளைப் போராடிப் பாதுகாத்திடவும், தமிழ்மக்களின் பெருங்கனவை நிறைவேற்றிடவும் எந்நாளும் ஓயாது உழைத்திட முதலமைச்சரின் தலைமையிலான இந்த அரசு உறுதி பூண்டுள்ளது குறித்து நான் மனமாரப் பாராட்டுகிறேன்”.
மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரப் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 3,631 மாற்றுத் திறனாளிகள் நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மரபுப்படி சட்டபேரவை நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஆளுநர் உரையை வாசித்து சபாநாயகர் அப்பாவு நிறைவு செய்தார்.
[youtube-feed feed=1]