காலாபுராகி, கர்நாடகா
கர்னாடகா மாநில ஆன்மிகத் தலைவரான சித்தேஸ்வர சாமிஜி தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை வாங்க மறுத்துள்ளார்.
கர்னாடக மாநிலம் விஜயபுராவில் உள்ளது ஞான யோகேஷ்வரம் என்னும் மடம். இந்த மடத்தின் மடாதிபதியான ஆன்மீகத் தலைவர் சித்தேஸ்வர சாமிஜி அவரது தொண்டர்களின் பக்திக்கும் மரியாதைக்கும் உரியவராக உள்ளவர். அவரை அவர் தொண்ட்ர்கள் ’வட கர்நாடகத்தின் நடமாடும்கடவுள்’ எனக் குறிப்பிடுகின்றனர். அவரது மத பிரசாரங்களில் பல கடினமான கருத்துக்களையும் எளிதாக விளக்குவார். இவரை புத்திஜி எனவும் அழைக்கிறார்கள்.
இவருக்கு இந்த வருடம் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை புத்திஜி மறுத்துள்ளார். சித்தேஸ்வர சாமிஜி, “நான் எனது வாழ்நாளில் எந்த ஒரு விருதையும் ஏற்றது கிடையாது. எனக்கு வரும் அத்தனை விருதுகளையும் நிராகரித்துள்ளேன். கர்நாடகா பல்கலைக் கழகம் எனக்கு அளித்த டாக்டர் பட்டத்தையும் நிராகரித்துள்ளேன். அதே முறையில் நான் இந்த பத்மஸ்ரீ விருதையும் பெற விரும்பவில்லை. எனது எளிய வாழ்க்கை முறையில் எந்த ஒரு விருதுக்கும் இடமில்லை என்பது மட்டுமே இதற்கு காரணம். இதில் எந்த ஒரு அரசியலும் இல்லை” என கூறி உள்ளார்.
புத்திஜியின் தொண்டர்கள் இந்த முடிவை வெகுவாக பாராட்டி உள்ளனர். அரசு தங்கள் குருவுக்கு விருது அளித்ததற்கு தங்களின் நன்றியையும், தனது வாழ்நாளில் எந்த ஒரு விருதையும் பெற விரும்பாத தங்கள் குருவுக்கு பாராட்டையும் தெரிவித்து அறிக்கைகள் அளித்துள்ளனர்.