கட்டுரையாளர்: அ. குமரேசன்
“ஆன்மீகமே அரசியல்தானே, அதிலென்ன ஆன்மீக அரசியல்,” என்று கேட்டு முகநூல் தளத்தில் பதிவிட்டிருந்தேன். அதை வரவேற்றும் வசைபாடியும் எதிர்வினைகள் வந்திருந்தன. சிலர் என்னைத் திருத்துகிற நோக்கத்துடன் ஆன்மீகம் என்றால் என்ன என்று விளக்கம் அளித்திருந் தார்கள். இந்தக் கருத்தை எப்போது, எதற்காகப் பதிவிட்டிருப்பேன் என்பதை எவரும் எளிதில் ஊகித்துவிட முடியும். ஆயினும், இப்போது மட்டுமல்ல, இத்தனை பரபரப்பு ஏற்படுத்தப்பட்டதற்கு முன்பாகவே ஆன்மீகம் பற்றிய எனது சிந்தனையை அவ்வப்போது பதிவு செய்து வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் மீது கொண்ட அன்போடும், எனக்குப் புரிய வைக்கும் அக்கறையோடும் பல வகையான விளக்கங்களைப் பல அன்பர்கள் அளித்து வந்திருக்கிறார்கள்.
அவர்களது அன்பையும் அக்கறையையும் பெரிதும் மதிக்கிறேன். ஆயினும் அந்த விளக்கங்கள் எனக்கு நகைப்பைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. அவர்களின் மனங்களைப் புண்படுத்திவிடக் கூடாது என்ற கவனத்துடன் எனது கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறேன்.
தற்போது ஆன்மீக அரசியல் என்ற சொல்லாடல் ஒரு சந்தையைப் பெற்றுள்ள நிலையில் ஊடகத்துறை நண்பர் ஒருவருடனான சந்திப்பின்போது எங்களுக்கிடையே நடந்த உரையாடல் இது:
“ஆன்மீகம் வேறு, மதவாதம் வேறு என்று தெளிவுபடுத்திவிட்டதாக சிலர் அவரைப் பாராட்டு கிறார்கள். உண்மையிலேயே இரண்டும் வேறு வேறுதானா?”
“ஆம். வேறு வேறுதான்.”
“அப்படியா, உங்கள் கருத்துப்படி ஆன்மீகம் என்றால் என்ன?”
“அஞ்சி அடங்குவது.”
“மதவாதம் என்றால்?”
“அச்சுறுத்தி அடக்குவது.”
முகநூலில் இதையும் பதிவிட்டிருந்தேன். முந்தையதை விட இதற்குக் கூடுதலாகவே எதிர்வினைகள் வந்திருக்கின்றன. முன்பெல்லாம், பத்திரிகைகள் மட்டுமே ஆதிக்க ஊடகமாக இருந்த நாட்களில் இப்படியான சர்ச்சைக்குரிய கருத்தை அத்தனை எளிதாக வெளியிட்டு விட மாட்டார்கள். கருத்தொற்றுமை உள்ள, பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புவதற்கென்றே புறப்பட்ட ஏடுகளிலும் சிற்றிதழ்களிலும்தான் வெளியிடுவார்கள். இத்தகைய கருத்துகளைத் தாங்களும் கொண்டிருக்கிற வாசகர்களிடம்தான் இது செல்லும், “சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்,” என்ற அவர்களது பாராட்டோடு நின்றுவிடும். இன்று சமூக ஊடகங்களின் வாயிலாக உடனடியாக இத்தகு சிந்தனைகளை வெளியிட முடிகிறது, தொடர்பே இல்லாதவர்கள் கூட ஆதரித்தோ மறுத்தோ எதிர்க்கருத்துகளைத் தெரிவிக்க முடிகிறது. இப்படியான விவாதப் பண்பாடும் கருத்து வெளிச் சுதந்திரமும் மேலோங்குவதே மானுட மாண்பு.
இப்போது நான் பேசப்போவது “ஆன்மீன அரசியல்” என்ற சந்தைச் சரக்கை விநியோகிக்கத் தொடங்கியிருப்பவருடன் அல்ல. அப்படிப்பட்ட விவாதப் பக்குவமோ, நம்மைப் போன்றவர்களை மதித்து உரையாடுகிற ஈடுபாடோ அன்னாருக்கு இருப்பதாகவும் தெரியவில்லை. இதெல்லாம் அவருக்கு இல்லை என்று சொல்லவில்லை, இருந்தால் நல்லது என்றுதான் சொல்கிறேன்.
ஆன்மீகம் குறித்த புரிதலை இந்த ஆளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று அக்கறை கொண்டி ருப்போருடன்தான் இந்த உரையாடல்.
இந்த உரையாடலில் நான், ஏற்கெனவே உள்நாட்டுச் சான்றோரும் உலகளாவிய அறிஞர்களும் என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார்கள் என்ற மேற்கோள்களைக் காட்டப்போவதில்லை. அவற்றை உள்வாங்கிக்கொண்டதன் அடிப்படையிலும், பலரோடும் விவாதித்திருப்பதன் அடிப்படையிலும் நான் என்ன நினைக்கிறேன் என்பதையே முன்வைக்கிறேன்.
எனது கருத்துதான் இறுதியானது என்ற பிடிவாதமும் இல்லை. ஏற்கத்தக்க எதிர்வாதம் வந்தால் என்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன். எதிர்வா தத்தை முன்வைப்போரும் அவ்வாறே தயாராக இருப்பார்களானால் மகிழ்ச்சி.
மதவாதம் அச்சுறுத்தி அடக்குவது என்ற இரண்டாவது கருத்தை ஆமோதிக்கிறவர்கள் கூட, ஆன்மீகம் என்பது அஞ்சி அடங்குவது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். ஆன்மீகமே அரசியல்தான் என்பதையும் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்கள்.
ஆன்மீகம் என்றால் பெருமளவுக்கு மதம் சார்ந்த சிந்தனையாகவே கற்பிக்கப்பட்டு வந்திருக்கி றது. மதம் கூறும் கடவுளைப் புரிந்துகொண்டு, மதம் வலியுறுத்தும் கடவுளை ஏற்றுக்கொண்டு, மதம் கற்பிக்கும் கடவுளோடு மனிதரின் “ஆன்மா” ஒன்றிணைவதே ஆன்மீகம் என்று கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. இக்கருத்தை அநேகமாக எல்லா மதங்களும் போதிக்கின்றன.
உன்னைத் தன் வடிவில் அல்லது தனது கருத்துப்படி படைத்தவர் கடவுள், அந்தக் கடவுளின் உண்மையை உணர்ந்து உன் ஆன்மா கடவுளைச் சரணடைவதுததான் ஆன்மீகம் என்கிறார்கள். கடவுளாலேயே படைக்கப்பட்டதாகக் கூறப்படும் விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுவி னங்கள், புற்கள், செடிகள், மரங்கள், பாசிகள், பாக்டீரியாக்கள் இன்னபிற உயிரினங்களுக்கும் அவற்றின் ஆன்மா கடவுளைத் தேடிப் புகலடைகிற ஆன்மீகம் உண்டா எனத் தெரியவில்லை. அந்த உயிர்கள் தமது அடுத்தடுத்த பிறப்புகளில் மனிதப் பிறவிகளாய் வருகிறபோது அந்த ஐக்கியம் நடக்குமோ என்னவோ.
கடவுள் என ஒன்றைப் படைத்துக் கற்பிக்காத சமயங்கள் மட்டுமே அந்தக் கடவுளோடு ஆன்மா ஐக்கியமாவது பற்றிப் பேசுவதில்லை (புத்தம், சமணம், விக்காயியம், கடந்த நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட சயின்டோலஜி, டாவோ உள்ளிட்ட சில மதங்கள் அனைத்தையும் படைத்து இயக்குகிற ஒற்றைக் கடவுள் பற்றிச் சொல்வதில்லை). ஆனால் அப்படிப்பட்ட சமயங்களிலும் ஆன்மா பற்றிப் பேசப்படுகிறது. ஆன்மாவின் கடமைகள் பற்றி அறிவுறுத்தப்படுகிறது. அந்தக் கடமைகளை முழுமையாக நிறைவேற்றுவதன் மூலம் ஆன்மா புனிதமடைகிறது, இயற்கை என்ற சக்தியோடு இணைகிறது என்று என வழிகாட்டப்படுகிறது.
மதங்களோடும், மதங்கள் கூறும் கடவுள்களோடும் சம்பந்தப்படாத ஆன்மீக வாதமும் உண்டு. அந்த ஆன்மீகவாதத்தைக் கையில் எடுப்பவர்கள், “கடவுள் மனித வடிவிலோ இதர வடிவங்க ளிலோ இல்லை. மதங்கள் கூறும் கடவுள் கதைகள் கற்பனைகளே. ஆனால், மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு ஆற்றல் இருக்கிறது, இயற்கையைக் கடந்த ஒரு இயங்குவிசை இருக்கிறது. அதுதான் கடவுள்,” என்கிறார்கள். சிலர் இன்னும் சுதந்திர மனதோடு, “அந்த ஆற்றலை வழிபட வேண்டியதில்லை, அதனிடம் வேண்டுதல்களை வைக்கத் தேவையில்லை, அதை உணர்ந்து, அதற்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தாலே போதும்,” என்கிறார்கள். அனைத்துக்கும் அப்பாற்பட்ட அந்த ஆற்றலுக்குப் பணிந்திருப்பதுதான் ஆன்ம விடுதலை என்கிறார்கள்.
கடவுளோ, ஆற்றலோ ஏதோவொன்றிற் குப் பணிந்திருப்பது, கட்டுப்பட்டிருபபது என்றால் அது எப்படி விடுதலையாகுமோ? அந்தப் பணிவு என்பதே பயத்தின் நீட்சி தான். பெரும்பாலும் பயம் என்பது மரணம் தொடர்பானதாகவே இருக்கிறது. இந்த உயிர்வாழ்க்கை சட்டென முடிந்து விடுமோ என்ற அச்சமே ஆள்கிறது. மரணத்திற்குப் பின் நாம் என்னவாக மாறுவோம், எப்படி இருப்போம், உலகத்தையும் உலக நிகழ்வுகளையும் பார்க்க முடியுமா, உணர முடியுமா என்ற வினாக்கள் ஏற்படுத்தும் குழப்பமும் உளைச்சலுமே அந்த அச்சத்திற்கு இட்டுச் செல்கிறது.
அதே வேளையில், அது மரண பயமாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. வாழ்க்கை பற்றிய அச்சமாகவும் இருக்கலாம். இந்த வாழ்க்கை இப்படியே இனிமையாகத் தொடருமா? ஏற்பட்ட துன்பங்களே தொடர்கதையாகுமா? நெருக்கடிகளும் கெடுபிடிகளும் நிம்மதிக்கான ஓட்டங்களும் குற்றவுணர்ச்சிகளும் ஆற்றாமைகளும் பொறாமைகளும் ஏக்கங்களும் முடிவுக்கு வராமலே வாழ்க்கை முடிந்துபோகுமா?
அதிகாரம், அன்பு, புகழ், மரியாதை, காதல், பாசம் எனச் சூழ்ந்துள்ள நிலைமைகளைத் தக்கவைக்க முடியுமா? -இத்தகைய குழப்பங்களும் அச்சங்களும் தான் மாற்று வழிகளைத் தேட வைக்கின்றன. மதம் சார்ந்த அல்லது மதமேதும் இல்லாத ஒரு குரு, ஆன்மாவின் விடுதலை பற்றியும் ஆன்மாவின் கடமை பற்றியும் பேசுகிறபோது அது நொறுங்கிப்போன மனதுக்கு மிகப் பெரிய ஆறுதலாகிறது.
அது சரி, ஆன்மா என்றால் என்ன? அப்படியொன்று இருக்கிறதா? மனித உடலில் ஆன்மா எங்கே இருக்கிறது? மெரினா கடற்கரை சமாதி வளாக ஆன்மாவை நிம்மதியாகவிட்டுவிடுவோம்.
(தொடர்ந்து உரையாடுவோம்..)