டில்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானம் விபத்துக்குள்ளாக இருந்தது குறித்து சிறப்பு பாதுகாப்புப் படை விமானக் கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் கேள்விகள் எழுப்பி உள்ளது.
கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானம் திடீரென கீழே இறங்கியது. விமான ஓட்டி சாமர்த்தியமாக விமானத்தை தரை இறக்கி விபத்தை தவிர்த்தார். இந்த சம்பவம் நடந்த போது தமது வாழ்க்கை இத்தோடு முடிந்து விடும் என நினைத்ததாக ராகுல் காந்தி தெரிவித்தார். இந்நிகழ்வு நாடெங்கும் பரப்பரப்பை கிளப்பியது.
ராகுல் காந்திக்கு மத்திய அரசு சிறப்பு பாதுகாப்பு காவல் அளிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. சிறப்பு பாதுகாப்புப் படை தலைவரிடம் இது குறித்து உடனடியாக ஆராய வேண்டும் என அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் பத்திரிகையாளரை சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பில், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்ற விமானம் விபத்துக்குள்ளாக இருந்தது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். அவர் சென்ற விமானம் கிளம்பும் முன்பு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பது குறித்து நாங்கள் விமானக் கட்டுப்பாட்டு நிர்வாகத்திடம் கேள்விகள் எழுப்பி உள்ளோம்.” என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
சிறப்பு பாதுகாப்புப் படை காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் தலைவர் பயணம் செய்யும் விமானத்தை தேர்ந்தெடுக்க உரிமை அளித்திருந்தது. அதனால் இந்த விமானத்தை காங்கிரஸ் கட்சி தேர்ந்தெடுத்ததா எனவும் அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் விமானங்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன என்பது குறித்தும் காங்கிரஸ் நிர்வாகிகளை கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.