மதுரை: வரும் அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்த தினம் முதல் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் உள்பட மேலும் நான்கு சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த (செப்டம்பர்) 7ந்தேதி முதல் தமிழகத்தில் பல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னையில் மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், புறநகர் ரயில் சேவையும், முழுமையான ரயில் சேவையும் இன்னும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், மேலும் 4 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. அதன்படி,
சென்னை-ராமேஸ்வரம்-சென்னை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இது காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக சென்னையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்படுவதால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மதுரை வழியாக சென்னை-செங்கோட்டை-சென்னை தினசரி ரயில்,
சென்னை-தென்காசி-சென்னை வாரத்தில் 6 நாட்கள் சிறப்பு ரயில்,
சென்னை- மதுரை-சென்னை இடையே தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களில் பயணிக்க முன்பதிவு வசதி அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.